Poes Garden: வேதா இல்லம்.. எதிர்ப்பையும் மீறி அதிமுக மேல்முறையீடு செய்ய அனுமதி.. தீபாவுக்கு புதிய தலைவலி.!

Published : Dec 15, 2021, 01:44 PM ISTUpdated : Dec 15, 2021, 01:51 PM IST
Poes Garden: வேதா இல்லம்.. எதிர்ப்பையும் மீறி அதிமுக மேல்முறையீடு செய்ய அனுமதி.. தீபாவுக்கு புதிய தலைவலி.!

சுருக்கம்

உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில், போயஸ் தோட்ட இல்லத்தின் சாவி, பிரதான வழக்கை தாக்கல் செய்த தீபா, தீபக் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளாதால், இந்த மேல் முறையீட்டு மனு செல்லத்தக்கதல்ல என்பதால் அனுமதி வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்தியது செல்லாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றும் வகையில் முந்தைய அதிமுக அரசு,  வேதா நிலையத்தை கையகப்படுத்துவது தொடர்பாக உத்தரவுகள் பிறப்பித்தது. அதேபோல, வேதா நிலையத்துக்கு இழப்பீடாக 67 கோடியே 90 லட்சம் ரூபாயும் நீதிமன்றத்தில் டிபாசிட் செய்யப்பட்டது.

வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்தும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த  வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி சேஷசாயி, நினைவு இல்லம் அமைப்பது பொதுப்பயன்பாடும் இல்லை. ஏற்கனவே நினைவிடம் உள்ள நிலையில் நினைவு இல்லம் அமைப்பது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என்றும் கூறி, வேதா நிலையத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகளை ரத்து செய்து நவம்பர் 24ம் தேதி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதி கோரி, அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை  உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சத்திகுமார் சுகுமார குரூப் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமயாஜி, அதிமுக ஆட்சியில் இருந்த போது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், தற்போது ஆட்சி மாற்றம் காரணமாக மேல் முறையீடு செய்யவில்லை என்பதால்  மேல் முறையீடுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரினார்.

மேலும், அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினராகவும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினராகவும், முன்னாள் சட்ட அமைச்சர் என்ற முறையிலும், அதிமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் என்ற முறையில் மேல் முறையீடு செய்ய அடிப்படை உரிமை உள்ளதாக தெரிவித்தார். ஆனால், ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதர்சனம், உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில், போயஸ் தோட்ட இல்லத்தின் சாவி, பிரதான வழக்கை தாக்கல் செய்த தீபா, தீபக் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளாதால், இந்த மேல் முறையீட்டு மனு செல்லத்தக்கதல்ல என்பதால் அனுமதி வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வேதா நிலையம் கையகப்படுத்திய விவகாரத்தில் அதிமுக சம்பந்தப்பட்ட தரப்பு அல்ல எனக் கூற முடியாது எனக் கூறி, மேல் முறையீடு செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மேல் முறையீட்டு மனு திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்த நீதிபதிகள், மேல்முறையீடு மனு மீதான நிலைப்பாட்டை பிரதான வழக்கு விசாரணையின் போது தெரிவிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!
என்னையா முடக்க பாக்குறீங்க.. அதுஒருபோதும் நடக்காது.. திமுக அரசை அட்டாக் செய்து விஜய் ட்வீட்!