
ஆந்திர அரசிடம் கணக்கு கேட்க அமித் ஷா யார்? நிர்வாகத்தில் பிஜேபியின் தேசியத்தலைவர் தலைவர் அமித்ஷா தலையிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார் சந்திரபாபு நாயுடு.
ஆந்திராவுக்குச் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்காத மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியதோடு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகியது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடிக்கு எதிராகவும் பாஜக அரசுக்கு எதிராகவும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்துவருகிறார்.
மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். இதற்கிடையே, டெல்லியில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, “ஆந்திர தலைநகர் அமராவதி கட்டுமானத்திற்காக மத்திய அரசு 2,500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால் சந்திரபாபு நாயுடு அரசு ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை. மேலும் நிதி செலவிடப்பட்டதற்கான ஆவணங்களை இன்னும் அளிக்கவில்லை” எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டில் பேசிய சந்திரபாபு நாயுடு, ஆந்திர அரசிடம் கணக்கு கேட்க அமித் ஷா யார்? விஜயவாடாவில் செலவின கணக்கு ஆவணங்களைப் பற்றி கேட்க அவர் யார்? இது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே உள்ள விவகாரம். ஆவணங்களை அளிக்கவில்லை எனப் பிரதமர் அலுவலகமோ, மத்திய அரசோ கூறியுள்ளதா?
தொடர்ந்து பேசிய அவர், அமித் ஷா பாஜகவின் தலைவராகவும் எம்.பி.யாக மட்டுமே உள்ளார். ஆந்திர அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி குறித்து கேள்வி எழுப்ப அவருக்கு எந்த உரிமையில்லை. தலைநகரை உருவாக்குவதற்காக ரூ. 50 ஆயிரம் கோடி மதிப்பில் 35 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளோம்.
ஆனால் மத்திய அரசு வெறும் 1,500 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது. குண்டூர் வடிகால் திட்டத்திற்காக மேலும் 1000 கோடி ரூபாயை அவர்கள் ஒதுக்கியுள்ளனர். நிதியைப் பயன்படுத்தியதற்கான சான்றிதழ்களை நாங்கள் முன்னரே தாக்கல் செய்துவிட்டோம்” என கூறியுள்ளார்.