
அரசியல்வாதிகள் தங்களை ஏமாற்றுகிறார்கள் என மக்கள் நிக்கத் தொடங்கினால்இ தேர்தலில் அவர்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் தனியாக பிரிக்கப்பட்ட பின், நடந்த சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தேர்தலைச் சந்தித்தது. தற்போது ஆந்திராவில் சந்திர பாபு நாயுடு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட 19 வாக்குறுதிகளை கொடுத்ததால்தான் தெலுங்கு தேசம் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் இன்றுவரை தேலுங்கு தேசத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
இதனால், சமீபத்தில் நடந்த முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டமும் நடத்தினர்.
ஆனால், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பாஜக மீதான அதிருப்திகளை உட்கட்சிக் கூட்டங்களில் மட்டுமே தெரிவித்து வந்தார். வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்துக்கான ஆலோசனைக் கூட்டம் அமராவதி நகரில் நடைபெற்றது. அப்போது மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
சந்திரபாபு நாயுடு பேசும்போது கடந்த 2014ம்ஆண்டு ஆந்திரமாநிலம் பிரிக்கப்பட்டபோது, சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், இதுவரை மத்திய அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாநிலத்துக்கு ஒதுக்கப்படும் நிதியும் போதுமானதாக இல்லை.
மக்கள் தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என உணர்ந்துவிட்டால், நாம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிடுவோம். தேர்தலின்போது கடுமையான முடிவுகளை மக்கள் எடுப்பார்கள் என எச்சரித்தார்.
ஆந்திர மாநிலத்தை பிரிக்கக் கூடாது என்று நாங்கள் கூறியபோது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி மாநிலத்தை பிரித்தது. அதற்கான விலையை சட்டசபைத் தேர்தலில் மக்கள் அளித்துவிட்டார்கள் என்றும் அவர்களால் டெபாசிட் கூட பெறமுடியவில்லை எனவும் தெரிவித்தார்.