
தேசிய தேர்தல் வரலாற்று புத்தகத்தை புரட்டிப் பார்த்தால் தடித்த அட்டைகளில் டி.என்.சேஷன் கால தேர்தல் சூழல்கள் பொறிக்கப்பட்டிருக்கும். தலைமை தேர்தல் அதிகாரியாக சில புரட்சிகர முடிவுகளை முன்னெடுத்த நிர்வாகி இவர் என்று மிக தைரியமாக கூறலாம்!
* மிக முக்கியமாக மக்களை டார்ச்சர் செய்யும் அரத பழைய பிரச்சார முறைகளுக்கு ரிவிட் வைத்தவர் இவர்.
* ’உங்கள் ஓட்டு’ எனும் ஸ்லோகனுடன் கண்ணில் தென்பட்ட சுவர்களையெல்லாம் கைமா செய்யும் பிரச்சார அத்துமீறலுக்கு ஆப்புகளை முன்னெடுத்தவர்.
* மிக முக்கியமாக, இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது! எனும் தனித்துவ சட்டத்தை சட்டத்தை கொண்டு வந்து தேர்தல் காலங்களில் மக்களின் நித்திரை கெடும் பஞ்சாயத்துக்கு முத்திரையான தீர்வு தந்தவர்.
* தேர்தல் நடத்தலாமா? என்று எலெக்ஷன் கமிஷன் யோசிக்க ஆரம்பித்த தினத்திலிருந்தே ‘அன்பார்ந்த வாக்காள பெருமக்களே!’ என்று ஓட்டை ஒலிபெருக்கியில் ஒண்ணரையணா கட்சிக்காரர்கள் கூட இம்சை கிளப்பும் செய்லகளுக்கு கட்டை போட்டு, ‘பிரச்சார நாட்கள் இவ்வளவே’ என்று முறைப்படுத்தப்படுவதை முன்னெடுத்தவர்!
...இப்பேர்ப்பட்டவர்தான் டி.என்.சேஷன்.
கடும் கட்டுப்பாடாக, சற்றும் வளைந்து கொடுக்காமல் ‘ரூல்ஸ் ராமானுஜமாக’ வலம் வந்தவர். இவருக்கும் நாத்திகம் பேசும் திராவிட அரசியலமைப்புகளுக்கும் ஏழாம் பொருத்தமாகதான் இருந்தது. ’தேர்தல் என்பது தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு ஜனநாயக திருவிழா. ஆனால் சேஷன் அதை ஒரு சம்பிரதாய தேர்வாக்கிவிட்டார்.’ என்று தி.மு.க. கூட கடித்துப் பிறாண்டியது.
அப்பேர்ப்பட்ட ஆளுமையான சேஷன் ஓய்வு பெற்ற பின் லைம்லைட்டிலிருந்து விலகிப்போனார். சில வருடங்களுக்கு முன் ‘சேஷன் ஒரு முதியோர் இல்லத்தில் விருப்பத்துடன் இணைந்திருக்கிறார்’ என்று ஒரு தகவல் பரவி தடதடத்தது.
அப்பேர்ப்பட்ட சேஷனைத்தான் இன்று சந்தித்திருக்கிறார் கமல்ஹாசன். அரசியல் கட்சி துவக்க இருக்கும் நாட்களை நெருங்கிவிட்ட கமல்ஹாசன் அதற்கான முன்னேற்பாடுகளின் நீட்சியாக பொறுக்கியெடுத்து சில முக்கிய ஆளுமைகளை சந்தித்து வருகிறார். அதில் இன்று சேஷனையும் சந்தித்திருக்கிறார்.
அட்டாசு அரசியல்வாதிகளை ‘தேர்தல்’ எனும் பிரம்பெடுத்து பழுக்க பழுக்க வெளுத்தவர் சேஷன் என்பார்கள். இன்று பழுத்த பழமாக இருக்கும் சேஷனை, தேர்தல் அரசியல் செய்யப்போகும் கமல்ஹாசன் சந்தித்திருப்பது வியப்பாகத்தான் இருக்கிறது.
சேஷனை கமல் சந்தித்து ‘எப்படி அரசியல் செய்யலாம்?’ என்பது பற்றி கேட்டுத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் ‘எப்படியான அரசியல்வாதியாக இருக்க கூடாது!’ என்று கேட்டுத் தெரிந்திருக்கலாம். காரணம், அந்தளவு கசப்புகளையும், சவால்களையும் அரசியலாதிகளிடமிருந்து சந்தித்திருப்பார் சேஷன். அவரது அனுபவ பகிர்வுகளே கமலுக்கு மிகப்பெரிய விழிப்புணர்வை தந்திருக்கலாம்.
புதிய அரசியல் பயணம் துவக்கியிருக்கும் கமலின் பாதையில் சேஷனின் வழிகாட்டுதல்கள் நிச்சயம் சில நாட்கள் உடன் வரலாம். அரசியல்வாதி கமல்ஹாசன், சேஷனுடன் கூட்டணி சேர்ந்துவிட்டார் என்று கூறலாகாது, ஆனால் கூட்டுச் சேர்ந்துள்ளார் எனலாம். சேஷனின் கறார் நிபந்தனைகளும், கட்டளைகளும், கடின ஆலோசனைகளும் ஜனரஞ்சக அரசியல் களமான தமிழகத்தில் என்ன மாதிரியாக கமலுக்கு கைகொடுக்குமென்பது புதிரே!
விடைகளை எதிர்நோக்குவோம் மெளனமாக...