
சர்வாதிகார மனப்போக்குடன் மாநிலங்களை அணுகும் மத்தியில்ஆளும் மோடி அரசுக்கு மாநிலங்கள் ஏன் வரி வசூலித்துக் கொடுக்க வேண்டும்? என ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆந்திர தலைநகர் அமராவதி நகரின் கட்டுமானத்திற்காக மத்திய அரசு 2,500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது; ஆனால் சந்திரபாபு நாயுடு அரசு அதற்காக ஒரு செங்கல்லைக் கூடஎடுத்து வைக்கவில்லை, மேலும் நிதி செலவிடப்பட்டதற்கான ஆவணங்களையும் இன்னும் அளிக்கவில்லை என பாஜக தலைவர் அமித்ஷா விமர்சனம் செய்திருந்தார்.
தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டில் இதற்கு பதிலடி கொடுத்த சந்திர பாபு நாயுடு, ‘ஆந்திர அரசிடம் கணக்குகேட்க அமித் ஷா யார்? விஜயவாடாவின் செலவினக் கணக்கு ஆவணங்களைப் பற்றி, அவர் எதற்குக் கேட்கிறார்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அமராவதி தலைநகர் உருவாக்கத் திட்டத்திற்கு, மத்திய அரசு வெறும் ஆயிரத்து 500 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளதாகவும், ஆனால், குண்டூர் வடிகால் திட்டத்திற்கு ஒதுக்கியரூ. 1000 கோடியைச் சேர்த்து அமித்ஷா ரூ. 2 ஆயிரத்து 500 கோடி என்று பொய் கணக்கு காட்டுகிறார் என அவர் குற்றம்சாட்டினார்.
இந்த நிதிகளைப் பயன்படுத்தியதற்கான சான்றிதழ்களை முன்னரே தாக்கல் செய்துவிட்டதாகவும் தெரிவித்த அவர், அப்படியே இருந்தாலும், , மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே உள்ள விவகாரம் குறித்து பேசஅமித்ஷா யார்? என கொந்தளித்தார்.
இதுவரை ஆவணங்களை அளிக்கவில்லை எனப் பிரதமர் அலுவலகமோ, மத்தியஅரசோ கேட்காத போது, ஆந்திர அரசுக்கு,மத்திய அரசு ஒதுக்கும் நிதி குறித்து கேள்வி எழுப்ப ஒரு கட்சியின் தலைவராக மட்டுமே இருக்கும் அமித்ஷாவுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்றும் கேட்டுள்ளார்.
குஜராத்தில் உள்ள தோலிரா நகரை, டெல்லியைக் காட்டிலும் 6 மடங்குபெரிதாக- சீன நாட்டின் ஷாங்காய் நகரைக் காட்டிலும் பெரிதாக உருவாக்குவேன் எனப் பிரதமர் மோடி கூறுகிறார்.
இதற்காக ரூ. 95 ஆயிரம் கோடியை மோடி அரசு செலவு செய்கிறது. ஆனால், ஆந்திர மாநிலம் அமராவதி நகருக்கு மட்டும் நிதி வழங்க மறுத்து பாகுபாடு காட்டுகிறது.இவ்வாறு சர்வாதிகார மனப்போக்குடன் மாநிலங்களை அணுகும்- மத்தியில்ஆளும் மோடி அரசுக்கு மாநிலங்கள் ஏன் வரி வசூலித்துக் கொடுக்க வேண்டும்? என சந்திர பாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.
நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம், மாநிலத்தின் வளர்ச்சிக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் வரை, போலாவரம் திட்டம் முடியும் வரை எங்களின் போராட்டம் ஓயாது.இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார்.