
சசிகலா குடும்ப ஆதிக்கம் இல்லாத அதிமுகவை உருவாக்குவதே டெல்லியின் விருப்பமாக இருந்தது. அதற்கான வேலைகளும் நடை பெற்று வருகின்றன.
ஆனாலும், அணிகள் இணைப்புக்கு பின்னர் முதல்வர் பன்னீரா? எடப்பாடியா? என்பதில் இரு தரப்பிலும் குழப்பம் நிலவுகிறது.
பன்னீர்தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று அவர் தரப்பிலும், எடப்பாடிதான் முதல்வராக இருக்க வேண்டும் என்று இவர் தரப்பிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லி மேலிடம் யாரை முதல்வராக அமர வைப்பது என்று தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
சசிகலாவை எதிர்த்து போர்க்கொடி பிடித்து வெளியில் வந்தவர், மோடியின் அபிமானத்திற்கு உரியவர் என்ற வகையில் பன்னீர் முதல் சாய்சாக உள்ளார்.
ஆனால், 122 எம்.எல்.ஏ க்கள் ஆதரவுடன் முதல்வராக அமர்ந்திருக்கும் எடப்பாடியும், அண்மை காலமாக மோடியின் மனம் அறிந்து செயல்பட்டு வருகிறார்.
அதற்காக, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே வலியுறுத்திய கோரிக்கைகளில் ஒன்றான கேபிள் டீ.வி டிஜிட்டல் அனுமதியை, தமிழக அரசுக்கு, எடப்பாடி காலத்தில் வழங்கி உள்ளார் மோடி.
மத்திய அரசின் உத்தரவை ஏற்று, தமது காரில் உள்ள சிவப்பு சுழல் விளக்கை, செய்தியாளர்கள் முன்பாக அகற்றி, தமது பவ்யத்தையும் காட்டிக் கொண்டார் எடப்பாடி.
அத்துடன், எடப்பாடியின் உறவினராக இருக்கும் ஆளுநர் ஒருவர் மூலமாகவும், துணை சபாநாயகர் தம்பிதுரை மூலமாகவும், மோடி உடனான நெருக்கத்தை வலுப்படுத்தி கொண்டுள்ளார் எடப்பாடி.
ஆனாலும், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் எடப்பாடிக்கு சொல்லிக் கொள்வதுபோல எந்த செல்வாக்கும் இல்லை.
ஆனால், எம்.எல்.ஏ க்களின் ஆதரவு பெரிய அளவில் இல்லை என்றாலும், தொண்டர்கள் மற்றும் பொது மக்களின் ஆதரவு பன்னீருக்கே அதிக அளவில் உள்ளது.
இதுவே, தேர்தலில் வெற்றி பெற உதவியாக இருக்கும். விசுவாசம் என்ற வகையில் இருவர் மீதும் குறை இல்லை. ஆனால் அடுத்து வரப்போகும் தேர்தல் என்று பார்க்கும்போது, பன்னீருக்கே கொஞ்சம் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிகிறது.
இதனால், யாரை முதல்வர் ஆக்குவது? என்பது குறித்து டெல்லி மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்.