
நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் மத்திய அரசின் பார்வை கிராமங்களின் பக்கம் திரும்பியிருப்பதாக பாராட்டுத் தெரிவித்த நடிகர் கமலஹாசன், தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
2018-2019 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தேர்தலை மனதில் கொள்ளாமல், மக்களை மனதில் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்த பட்ஜெட்டின் கோரமுகம் அடுத்தடுத்த ஆண்டுகளில் தெரியவரும் என்றும், நல்ல வேளையாக அது பாஜகவின் கடைசி பட்ஜெட் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.
இது அலங்கார வார்த்தைகள் நிறைந்த பட்ஜெட் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில் விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தின் மீது மத்திய அரசு பாரா முகம் காட்டி உள்ளது என குற்றம்சாட்டினார்.
பட்ஜெட்டில் தமிழகம் பல ஆண்டுகளாகவே புறக்கணிக்கப்படுவது ஒரு சோகம் என்றும், மத்திய அரசின் பார்வை விவசாயிகள் மற்றும் கிராமங்களின் பக்கம் சற்றே திரும்பி இருக்கிறது என்றும் கமல் தெரிவித்தார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியம் பிடித்தம் செய்வது முதலாளித்துவத்தின் உச்சகட்டம். என்று குற்றம்சாட்டிய கமல்ஹாசன், பட்ஜெட் குறித்து அறிஞர்களுடன் ஆலோசித்த பின்னரே எனது கருத்தை தெளிவாக கூற முடியும் என்று கூறினார்..