Jaibhim படத்துக்கு மத்திய, மாநில அரசுகள் விருதுகள் தரக் கூடாது.. கேப் விடாமல் மல்லுக்கட்டும் வன்னியர் சங்கம்.!

By Asianet TamilFirst Published Nov 18, 2021, 7:40 PM IST
Highlights

அக்னி குண்டம் என்பது வன்னியர்களின் புனித சின்னம். இது பல நூற்றாண்டுகளாக உள்ளது. இதேபோல் குரு என்பது வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவருடைய பெயர். ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னி குண்டம், குருவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

‘ஜெய் பீம்’ படத்தில் வன்னியர்கள் தொடர்பாக தவறான காட்சிகள், வசனங்கள் இருப்பதாலும் சமூக நல்லிணத்துக்கு பங்கம் விளைவிப்பதாலும் அப்படத்தை அங்கீகருத்து விருதுகள் எதுவும் வழங்கக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு வன்னியர் சங்கம் சார்பில் மனு அனுப்பட்டுள்ளது. 

'ஜெய்பீம்’ படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற அளவுக்கு சர்ச்சைகளையும் சந்தித்துவிட்டது. கடலூரில் 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் வந்த ஒரு சில காட்சிகளை வைத்து சர்ச்சைகள் உருவாகிவிட்டன. படத்தில் கொடூரமான மனித உரிமை மீறல் குற்றத்தை நிகழ்த்தும் துணை ஆய்வாளர் குருமூர்த்தியின் கதாபாத்திரமும் அவருடைய வீட்டில் இருக்கும் அக்னி கலச காலாண்டரும் சர்ச்சைக்கு வித்திவிட்டுவிட்டது. அக்னி கலச காலாண்டர் காட்சி நீக்கப்பட்டபோதும், பாமக லேசில் விடவில்லை. நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகள் கேட்டு அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்துக்கு சூர்யா அளித்த பதில் கடிதத்தால் பாமக தலைமை கொந்தளித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்பிறகே வன்னியர் சங்கத்தையும் அக்கட்சி களத்தில் இறக்கிவிட்டதாகவும் அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று பாமக மாவட்டச் செயலாளர் பேசியது, சூர்யாவும் ஜோதிகாவும் மன்னிப்புக் கோர வேண்டும், நஷ்ட ஈடு 5 கோடி வழங்க வேண்டும் என்று வன்னியர் சங்கமும் சூர்யாவுக்கு நெருக்கடிக் கொடுத்தது. இந்த விஷயத்தில் இடதுசாரி, தலித், திராவிட கருத்தியல் பேசுவோர் சூர்யா பக்கம் நிற்கின்றனர். என்றாலும் பாமகவும் வன்னியர் சங்கமும் இதர வன்னியர் அமைப்புகளும் உக்கிரத்தைக் குறைத்துக்கொள்ளவில்லை. 

இதற்கிடையே இப்படத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டியபோதும், சமூக ஊடகங்களில் இயங்கும் பாஜகவினரும் சூர்யாவுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார். உண்மை சம்பவத்தில் அந்தோணிசாமி என்ற துணை ஆய்வாளர்தான் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்டார். ஆனால், ரீல் கதையில் குருமூர்த்தி என்ற இந்து பெயர் வைக்கப்பட்டதையும் அக்னி கலச காலாண்டர் காட்சியில் மகாலெட்சுமி படம் மாற்றப்பட்டதையும் பாஜக கடுமையாக எதிர்க்கிறது. இப்படி ஜெய்பீம் மற்றும் சூர்யாவைச் சுற்றி நெருக்கடிகள் இன்னும் தீவிரமாகியிருக்கின்றன.

இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக ஜெய்பீம் படம் தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கும் தமிழக அரசுக்கும் வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் பாலு மனு அனுப்பியுள்ளார்.  அதில், “அதில், அக்னி குண்டம் என்பது வன்னியர்களின் புனித சின்னம். இது பல நூற்றாண்டுகளாக உள்ளது. இதேபோல் குரு என்பது வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவருடைய பெயர். ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னி குண்டம், குருவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக சிவில் மற்றும் கிரிமினல் வழக்கை  வன்னியர் சங்கம் தொடர உள்ளது.

வன்னியர்கள் தொடர்பாக தவறான காட்சிகள், வசனங்கள் போன்றவை இருப்பதாலும், சமூக நல்லிணத்துக்கு பங்கம் விளைவிப்பதாலும் அப்படத்தை அங்கீகரிக்கக் கூடாது. அப்படத்துக்கு தேசிய விருது போன்ற விருதுகள் வழங்க கூடாது என வன்னியர் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

click me!