தென் மாவட்டங்களில் ஜாதி வாக்கு.. அதிமுக மேலிடம் போட்ட தப்புக் கணக்கு.. காத்திருக்கும் இன்பதுரை..!

By Selva KathirFirst Published Aug 1, 2020, 9:10 AM IST
Highlights

தென் மாவட்டங்களில் ஜாதி வாக்கு வங்கியை தக்க வைக்கும் திட்டத்துடன் அண்மையில் அறிவிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலில் குறிப்பிட்ட தங்கள் சமுதாயம் கண்டுகொள்ளப்படவில்லை என்று அதிமுக மேலிடத்திற்கு அதிருப்தி மேல் அதிருப்தி தெரிவித்து தாக்கீதுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
 

தென் மாவட்டங்களில் ஜாதி வாக்கு வங்கியை தக்க வைக்கும் திட்டத்துடன் அண்மையில் அறிவிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலில் குறிப்பிட்ட தங்கள் சமுதாயம் கண்டுகொள்ளப்படவில்லை என்று அதிமுக மேலிடத்திற்கு அதிருப்தி மேல் அதிருப்தி தெரிவித்து தாக்கீதுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து அதிமுக பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை கட்சியில் மேற்கொண்டு வருகிறது. மறுபடியும் கட்சியில் மாவட்டச் செயலாளர்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றி சட்டமன்ற தேர்தலுக்கான அசைன்மென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் யாரும் எதிர்பாராத வகையில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதியவர்கள் மற்றும் செல்வாக்குமிக்கவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவிகள் கொடுக்கப்பட்டன.

இப்படி கொடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவிகள் ஜாதி வாக்கு வங்கியை கணக்கிட்டும் கொடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள். குறிப்பாக தென் மாவட்டங்களில் இந்த விஷயத்தில் அதிமுக மேலிடம் மிகவும் கவனமாக செயல்பட்டுள்ளது. நாடார்கள் அதிகம் உள்ள தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களுக்கு நாடார்களை மாவட்டச் செயலாளர் ஆக்கியுள்ளது. இதே போல் தேவர்கள், நாயக்கர்கள் போன்றோருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாடார்களுக்கு கொடுக்கப்பட்ட பிரதிநிதித்துவம் கிறிஸ்தவ நாடார்களுக்கு கொடுக்கப்படவில்லை என்கிற குரல் எழுந்துள்ளது.

தென்மாவட்டங்களில் விருதுநகரை தாண்டினால் தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கிறிஸ்தவ நாடார்கள் தான் பெரும்பான்மையாக இருக்க கூடியவர்கள். பாஜகவுடனான கூட்டணி காரணமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர்கள் அதிமுகவை கண்டுகொள்ளவில்லை. இது குறித்து கிறிஸ்தவ நாடாரும் ராதாபுரம் தொகுதி எம்எல்ஏவுமான இன்பதுரை பல முறை கட்சி மேலிடத்திற்கு பல்வேறு விஷயங்களை எடுத்துக் கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் கிறிஸ்தவ நாடார்களை ஈர்க்கும் வகையில் சில திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் இன்பதுரை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசி வருகிறார்.

தென்மாவட்டங்களில் இருந்து எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக இருப்பவர்களில் இன்பதுரையும் ஒருவர். முதலமைச்சர் எடப்பாடியை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கும் அளவிற்கு அவருடன் நல்ல பழக்கத்தில் உள்ளார். அந்த அடிப்படையிலும் கிறிஸ்தவ நாடார் என்கிற அடிப்படையிலும் இன்பதுரைக்கு நெல்லை மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தை முழுவதுமாக கொடுக்கவில்லை என்றாலும் ராதாபுரம், நாங்குநேரி தொகுதிகளை மட்டும் பிரித்து ஒரு மாவட்டமாக்கி இன்பதுரைக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படி எந்த பதவியும் இன்பதுரைக்கு கொடுக்கப்படவில்லை. இதனால் மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் கிறிஸ்தவ நாடார்கள் புறக்கணிப்பு என்கிற பேச்சு தென்மாவட்டங்களில் அடிபடத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே கூட்டணியில் பாஜக இருப்பதால் கிறிஸ்தவ நாடார்கள் அதிமுக மீது அதிருப்தியில் உள்ளனர். தற்போது மாவட்டச் செயலாளர்கள் நியமனத்திலும் அதிமுக மேலிடம் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரவில்லை என்று அவர்கள் தங்கள் மனக்குமுறலை கொட்டி வருகின்றனர்.

அதே சமயம் இன்பதுரையோ எம்எல்ஏ தேர்தலில் வெற்றி பெற்ற பிரச்சனையே ஓயாத நிலையில் இருக்கிறார். அவரது எம்எல்ஏ பதவியே கேள்விக்குறியாகி உள்ள நிலையில் மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்தால் அவர் சிறப்பாக செயல்படுவாரா? என்று எழுந்த கேள்வி தான் அவருக்கு பதவி கொடுப்பதை தடுத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

click me!