டிடிவி தினகரன் தொகுதியில் கவிஞர் வைரமுத்து மீது வழக்கு பதிவு!

First Published Jan 17, 2018, 3:46 PM IST
Highlights
case registered against vairamuthu on rk nagar police station


டிடிவி தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதி காவல் நிலையத்தில்,  ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதாக  சிவசேனா அளித்த புகாரின் அடிப்படையில் கவிஞர் வைரமுத்து மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகக் கூறி கவிஞர் வைரமுத்து மீது பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு நாளேட்டின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய வைரமுத்து, ஆண்டாள் குறித்து அமெரிக்க பல்கலைகழகத்தில் ஓர் ஆய்வு செய்யப் பட்டுள்ளதாகக் கூறி, அதனை மேற்கோள் காட்டி, மிகவும் இழிவாகப் பேசினார். குறிப்பாக, ஒரு பெண் தெய்வமாக பலராலும் போற்றி வணங்கப்படும் ஒருவரை, கீழ்த்தரமாக விமர்சித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தமிழகம் முழுவதும் புகார்கள் பல காவல் நிலையங்களில் அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிவசேனா கட்சியின் சார்பில் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. 

இந்தப் புகாரின் அடிப்படையில் வைரமுத்து மீது வகுப்பு விரோதத்தைத் தூண்டுதல், இறையாண்மையை இழிவு படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, வைரமுத்து பேச்சுக்கு பெரிதாக எந்த அரசியல் கட்சிகளும் முன் வந்து கருத்து தெரிவிக்காத நிலையில், பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை அளித்ததை அடுத்து, டிடிவி தினகரன் தான் வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்து பேட்டி அளித்தார். அவர் நின்று வெற்றி பெற்ற தொகுதியில் இப்போது, கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. 

click me!