
ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த அதிகாரி ஜெயக்கொடியை மாற்றியது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் அதிகாரி ஜெயக்கொடியை மாற்றியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அமோகமாக நடைபெற்றதை அடுத்து, குட்கா கிடங்கு ஒன்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் ஒரு டைரி சிக்கியதாகவும் அதில், குட்காவை உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கும் சென்னையில் செயல்பட்டு வந்த குட்கா நிறுவனம் லஞ்சம் கொடுத்தது தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் டிஜிபி ராஜேந்திரனின் பதவி நீட்டிக்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தி வந்தார்.
இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் திமுக வழக்கு தொடர்ந்தது. அந்த உத்தரவில் இதுகுறித்து விசாரிக்க விசாரணை அதிகாரியாக ஜெயக்கொடி நியமிக்கப்பட்டார். அவர் நேர்மையாக வழக்கை விசாரித்து வந்த நிலையில், அவர் மாற்றப்பட்டார்.
இதை எதிர்த்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த அதிகாரி ஜெயக்கொடியை மாற்றியது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் அதிகாரி ஜெயக்கொடியை மாற்றியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.