
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 101ஆவது பிறந்த நாள் விழா மற்றும் நூற்றாண்டு நிறைவுவிழா, ராமாவரம் தோட்டத்தில் இன்று மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் அரசியல் பிரமுகர்கள் பலரும், தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கலந்துகொள்கின்றனர்.
நூற்றாண்டு விழா நிறைவை சிறப்பாகக் கொண்டாட, ஆளும் கட்சியான அதிமுக மிக பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிடாமல் இருக்க பலத்த போலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விழாவில் பங்கேற்பதற்காக, நடிகர்கள் என்பதையும் தாண்டி, தங்களுடைய அரசியல் ஆசையை சமீப காலமாக வெளிக்காட்டி, புதிதாக அரசியல் களம் காண தயாராக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனும் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.
பழம் பெரும் நடிகர்களும், அரசியல் தலைவர்களும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.ஜி.ஆரால் பிள்ளையார் சுழி போடப்பட்டு, துவங்கப்பட்ட அதிமுக கட்சி, தற்போது தமிழகத்தை ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில், அவருடைய நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவது பெருமையாகப் பார்க்கப்படுகிறது.