சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பால் தனது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், இன்று லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளனர். இதனையடுத்து எம்எல்ஏ பதவியை பறித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி
கடந்த திமுக ஆட்சி காலமான 2006 - 2011 கால கட்டத்தில் அமைச்சராக பொறுப்பு வகித்த பொன்முடி, தங்கம் தென்னரசு, ஐ .பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்ஆர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றம் விடுவித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் வழக்கை விசாரித்து வருகிறது. அந்த வகையில் அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவியை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு விடுவித்தது.
உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு
இதனை எதிர்ந்து உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2017ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பு வழங்கினார். அதில் வருமானத்திற்கு அதிகமாக பொன்முடி 69% சொத்து சேர்த்தது உறுதி செய்யப்படதாக கூறினார். மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கியும் உத்தரவிட்டார். இதன் காரணமாக எம்எல்ஏ பதவியை இழக்க நேரிட்டதால் அமைச்சர் பதவியையும் இழந்தார். இதனையடுத்து ஒரு மாத காலத்தில் விழுப்புரம் சிறையில் சரணடைய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீனு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சிறையில் சரண்டைவதற்கான உத்தரவை நீதிபதி நிறுத்தி வைத்தார்.
3 ஆண்டு தண்டனைக்கு தடை கிடைக்குமா.?
அதே நேரத்தில் 3 ஆண்டு சிறை தண்டனை என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவிட்டனர். அதன்பிறகே தண்டனையை நிறுத்தி வைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிவித்தனர். இந்த வழக்கு வீசாரணையும் மார்ச் 4ஆம் தேதிக்கு (இன்று)ஒத்திவைத்தார்.இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் பொன்முடி மீதான குற்றம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவுள்ளனர். இந்த அறிக்கையை பொறுத்து பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனை ரத்து செய்யப்படுமா? அல்லது தண்டனை உறுதி செய்யப்படுமா என தெரியவரும்