திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம் நடத்தும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்தநிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக இன்று போராட்டம் நடைபெறவுள்ளது.
மாணவர்களை சீரழிக்கும் போதைப்பொருள்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் விநியோகம் அதிகரித்துள்ளது. இதனை திமுக அரசு கட்டுப்படுத்த தவறியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களிடம் காணொளிப் பதிவு மூலம் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது, திமுக அயாலக அணி நிர்வாகி ஜாபர் சாதிக் போதைப் பொருள் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். இளைஞர்கள் மாணவர்களை சீரழிக்கும் போதைப் பொருள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறேன். போதைப் பொருள் நம் அனைவரின் வாழ்வியலை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் விஷயம், போதைப் பொருளால் அதிகமாக பாதிக்கப்படுவது பள்ளி கல்லூரி மாணவர்களும் ஐ டி துறையினரும் தான்.
ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது
பெற்றோராக தாயாக தந்தையாக நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். பெற்றோராக நம் முதல் கடமை நம் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவது தான். முதலமைச்சர் குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் போதை பொருள் மாபியா தலைவராக இருக்கிறார் என்றால் தமிழ்நாட்டை அதள பாதாளத்துக்கு முதலமைச்சர் அழைத்து செல்கிறார். நேற்று ஒரே நாளில் 180 கோடி மதிப்புக்கு போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் புழக்கத்தை இனியும் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் கைக்கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால், சர்வதேச போதைப் பொருள் மாபியாவுக்கு கருவியாக இருக்கும் திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்
இந்தநிலையில் தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கண்டித்து அதிமுக சார்பில் இன்று அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. டெல்லியில், போதைப் பொருள் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு தலைவராக திமுக அயலக அணியின் நிர்வாகி ஜாபர் சாதிக் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், \
திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் அதிமுக ஆர்பாட்டம் நடத்தும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பிற்கினங்க, இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதையும் படியுங்கள்