மோடி பிறந்த நாளை கொண்டாடிய பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு... போலீஸார் மீது எல்.முருகன் ஆதங்கம்..!

By Asianet TamilFirst Published Sep 20, 2020, 9:12 AM IST
Highlights

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது மாம்பலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரதமர் மோடிக்கு செப்டம்பர் 17 அன்று 70-வது பிறந்த நாளாகும். பிரதமர் பிறந்த நாளை சேவை வாரமாக பாஜகவினர் கொண்டாடிவருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக மோடியின் 70-வது பிறந்த நாள் விழாவை கடந்த 17-ம் தேதி தமிழக பாஜகவினர் கோலாகலமாகக் கொண்டாடினார்கள். அன்றைய தினம் தமிழக பாஜக சார்பில் சென்னை தியாகராய நகரில் மாநில பாஜக தலைவர் எல்.முருகன் 70 அடியில் கேக் வெட்டினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சாரட் வண்டியில் எல்.முருகன் ஊர்வலமாகவும் சென்றார்.

 
இந்நிலையில் ஊர்வலமாக சென்ற எல்.முருகன் மீது மாம்பலம் போலீஸார் அதிரடியாக வழக்குப்பதி செய்துள்ளனர். கொரோனா காலத்தில் 144 தடை உத்தரவு தமிழகம் முழுவதும் உள்ளது. தடையை மீறி அனுமதியின்றி சாரட் வண்டியில் சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக எல். முருகன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல பாஜகவினர் 100 பேர் மீதும் மாம்பலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே எல்.முருகன் மீது இதேபோல போலீஸார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையே தன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தது பற்றி எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார். பாடியில் பலூன் வெடித்து தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை எல்.முருகன் நேரில் சென்று நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கூட்டத்தை கூட்டியதற்காக வழக்குப்போடுவதாக இருந்தால், தமிழ்நாட்டில் அனைவர்மீதும் வழக்குபோட வேண்டி வரும். அவ்வளவு பேர் மீதும் இவர்களால் வழக்குபோட முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

click me!