எஸ்.பி.வேலுமணிக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்..!

By vinoth kumarFirst Published Jun 27, 2022, 12:51 PM IST
Highlights

முந்தைய அதிமுக ஆட்சிகாலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக ஆகியோர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் தொடரப்பட்டது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

முந்தைய அதிமுக ஆட்சிகாலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக ஆகியோர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் தொடரப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, புகாரில் அடிப்படை முகாந்திரம் இல்லை என அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில் வழக்கை முடிக்க கோரி தமிழக அரசும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.

இதையும் படிங்க;- ஓபிஎஸ்-க்கு அன்று நல்ல நேரம்... இல்லனா வேற மாதிரி போயிருக்கும்.. ஆதங்கம் படும் டிடிவி. தினகரன்..!

இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து டெண்டர் முறைகேடு தொடர்பாக வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் 10 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், புகாரில் முகாந்திரமில்லை என்ற ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை வழங்கக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் வேலுமணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தை நாட அனுமதித்தனர்.

இதையும் படிங்க;-  நீதிபதிகள் தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் என்ன சொன்னார் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.!

அதன்படி வேலுமணி கோரிக்கையை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை தர லஞ்ச ஒழிப்பு துறை கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு  தடை விதிக்கக் கோரியும் வேலுமணி தரப்பில் புதிதாக கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த மனு எப்படி விசாரணைக்கு உகந்தது எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த வேலுமணி தரப்பு மனுவில் கூறப்பட்ட புகார்களில் உள்ள முகாந்திரம் குறித்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் கண்காணிப்பில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, அதில் புகாரில் முகாந்திரம் இல்லை என அறிக்கை அளிக்கப்பட்டது.  எனவே வழக்கை முடித்து வைப்பது என முடிவு செய்த பின் வழக்குப்பதிந்தது தவறு எனவும் வாதிடப்பட்டது. மேலும், உச்ச நீதிமன்ற அனுமதியுடன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும், அரசு ஏற்கனவே எடுத்த முடிவை மாற்ற முடியாது எனவும், உள்நோக்கத்துடன் வழக்குப் பதியப்பட்டுள்ளதால் வழக்குக்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க;- அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர் கிழிப்பு..! கட்டிட கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பதற்றம்

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, வழக்குப்பதிவு செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிடவில்லை. வழக்கை ரத்து செய்யக் கோரி உரிமை உள்ளது என்ற போதும், ரிட் மனுவாக தாக்கல் செய்ய முடியாது என நீதிபதிகள் தெரிவித்து, வேலுமணி மீதான வழக்குக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். வழக்கை ரத்து செய்யக் கோரிய வேலுமணி மனுவுக்கு தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத் துறை, அறப்போர் இயக்கம், திமுக ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 25க்கு ஒத்திவைத்தனர்.

click me!