
கரூர் மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் முறைகேடு நடந்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கு திரும்பப் பெறப்பட்டது. இதனையடுத்து அதை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவற்றை மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இது ஒரு புறம் இருந்தாலும், முன்னதாக ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அறிவித்த நிலையில் முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடந்து வருகிறது. அந்த வகையில் முதலில் சோதனைக்கு ஆளானவர் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் ஆவார்.
இந்நிலையில்தான் கரூர் மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் ஊழல் நடந்திருப்பதாக திமுக அரசு மீது குற்றச்சாட்டை வைத்தார். 2020 -2021 கரூர் மாவட்டத்தில் ஆறு சாலைகள் அமைக்க 130 கோடி ரூபாய் அளவிற்கு சங்கரானந்த் இன்ப்ரா என்ற தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டதாகவும் அதனடிப்படையில் அந்நிறுவனத்திற்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்றும், அதில்தான் மூணு கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டினார். மேலும் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் அவர் புகார் கொடுத்தார். அதில் நடவடிக்கை இல்லாததால் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிய வேண்டும் என வலியுறுத்திய அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அந்த மனுவில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு நெருக்கமான சங்கரானந்தின் இன்ப்ரா நிறுவனத்திற்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் பெயரில்தான் மோசடி நடந்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த மனு நீதிபதி டி.என் பிரகாஷ் மற்றும் நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில் புகார் அளித்த பின்னரே ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் குறிப்பிட்ட அந்த சாலைகளை அமைத்துள்ளதாகவும், கண்துடைப்புக்காக இந்த விஷயத்தில் நான்கு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் இதன்மூலம் முறைகேடு நடந்ததை ஒப்புக் கொண்டுள்ளதால், இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
அரசு தரப்பில் இந்த வழக்கில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்தார். அதேநேரத்தில் புகாரில் போதுமான ஆதாரங்கள் இல்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதனால் இந்த மனுவை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என விஜயபாஸ்கர் தரப்பில் கோரப்பட்டது. அதேநேரத்தில் தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளிக்கவும், விஜயபாஸ்கர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்ததுடன், இந்த வழக்கை ரத்து செய்தனர்.