எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு.. இப்போதைக்கு பெரிதுபடுத்த வேண்டாம்.. உயர் நீதிமன்றம் அறிவுரை..!

By vinoth kumar  |  First Published May 5, 2023, 7:28 AM IST

தனக்கு எதிராக புகார் அளித்துள்ள மிலானி தனது தொகுதியைச் சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல. தனது வேட்புமனுவில் எந்த தவறான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஆகையால் புகார் விசாரணைக்கு உகந்ததல்ல. 


தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்திருப்பதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை பெரிதுபடுத்த வேண்டாம் என்று காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளார் என்று தேனி மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மிலானி சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- இபிஎஸ்யை பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை ரத்து செய்யுங்கள்.! தேர்தல் ஆணையம் பதில் அளிக்க நீதிபதி நோட்டீஸ்

இந்த வழக்கு விசாரித்த சேலம் நீதிமன்றம் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும், விரிவான விசாரணை நடத்தி  30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

இதனிடையே, இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் தனக்கு எதிராக புகார் அளித்துள்ள மிலானி தனது தொகுதியைச் சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல. தனது வேட்புமனுவில் எந்த தவறான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஆகையால் புகார் விசாரணைக்கு உகந்ததல்ல. இதை எதையும் கருத்தில் கொள்ளாமல் சேலம் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு என்று அந்த மனுவில் குறிப்பட்டிருந்தார். 

இதையும் படிங்க;- மாய வலைக்குள் சிக்கிகொண்ட கழகம்! ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தலைவன் உருவாகணும்! ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ஆவேச பதிவு.!

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் மே 26ம் தேதிக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டுமென சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவசர கதியில் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கு குறித்து காவல்துறை உரிய பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை  ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

click me!