
புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஜெயமூர்த்தி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியைச் சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (62) கடந்த 2016-ம் ஆண்டு இத்தொகுதியில் காங்கிரஸில் போட்டியிட்டு வென்ற இவர் இம்முறை தோல்வியடைந்தார். நேற்று காலை கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டார். பின்னர் வீட்டில் மதியம் உணவு சாப்பிடும் போது நெஞ்சு வலியால் திடீரென்று மயங்கினார்.
இதையடுத்து உடனே அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி தரப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.பி. வைத்திலிங்கம் மருத்துவமனைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தியின் மனைவி விஜயலட்சுமி. இவர்களின் இரு மகள்கள் டாக்டர்களாக உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, இருதய ஆஞ்சியோ சிகிச்சை செய்த இவர் கடந்த ஆண்டு கொரோனா பாதித்து குணமடைந்தார். கடந்த மாதம் ஏப்ரல் 7ம் தேதி கொரோனா முதல் தடுப்பூசி எடுத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.