
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சிதறு தேங்காயைப்போல பொடிப்பொடியான அதிமுக 3 அணிகளாக உடைந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது.
சசிகலாவின் அரசியல் வருகையை எதிர்த்து ஜெ.,சமாதியில் தியானம் இருந்த பன்னீர் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே தன பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். அதிகார மையத்தை எதிர்த்ததால் இவரின் மீது ஒரு நம்பிக்கை வைத்து சசிகலாவின் எதிர்ப்பாளர்கள் இவரை பின் தொடர்ந்தனர். இவர் பதவியிலிருக்கும் போதே சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் தினகரன் துணைப் பொதுச் செயலாளரானார். எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆனார். இப்படி தான் முடிந்தது முதல் பாதி.
இதன் பின்னர் 2 அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கு வசதியாக சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவாளர்கள் தனி அணியாக இயங்கி வருகிறார்கள். இதனால் சசிகலா அணி இரண்டாக அணிக்குள் அணி உருவானது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்த போது, கட்சியை கட்டுக் கோப்புடன் வைத்திருந்தார். அவரது மறைவு அ.தி.மு.க.வை துண்டு துண்டாக சிதறடித்துள்ளது. அவரது மறைவுக்கு பிறகு கட்சியை வழி நடத்த சரியான தலைமை இல்லை. இதனால் ஆள் ஆளுக்கு அதிகாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க் களான தங்கதமிழ்ச்செல்வன், தினகரன் ஆகியோர் அமைச்சர்களுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றனர். சட்டசபையில் இருந்து தங்கதமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. வெளி நடப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
சசிகலா குடும்பத்தையே கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டோம் என்று எடப்பாடி அணியினர் கூறி வந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் தலைமை கழகம் என்ற பெயரில் யாருடைய பெயரும் இன்றி பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் தினகரனும் தனியாக ஆதரவு அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவளிக்கும் முடிவை சசிகலாவும், எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்தே எடுத்தனர் என்று தம்பிதுரை திடீரென கருத்து தெரிவித்தார். இதனால் சசிகலா கட்சிக்குள்ளேயே இருக் கிறாரா? அல்லது வெளியே இருக்கிறாரா? என்கிற குழப்பம் ஏற்பட்டது.
இதற்கு முன் இலைக்காக திஹார் சென்று திரும்பிய தினகரனை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக சென்று சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர். தற்போது 34 பேர் அணி திரண்டு எடப்பாடிக்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில் கட்சியின் மூத்த நிர்வாகியும், துணை சபா நாயகருமான தம்பிதுரைக்கு எதிராக 2 எம்.பி.க்களும், எம்.எல்.ஏ. ஒருவரும் போர்க் கொடி தூக்கி இருப்பதும், அமைச்சர் சம்பத்துக்கு எதிராக 4 எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்ததும் அ.தி.மு.க.வில் புதிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ.க்கள் அணி அணியாக திரண்டு புதிய தலைவலியை ஏற்படுத்தி வருவதும் உறுதியாகியுள்ளது.
இவர்களைத் தொடர்ந்து மற்றொரு ஒரு செய்தி வலம் வந்துகொண்டிருக்கிறது. ஆமாம்... ஜெயலலிதா இருக்கும் போதே, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அதிமுக எம்.பி சசிகலா புஷ்பாவை பற்றிய செய்திதான் அது, மேற்கண்ட எந்த அணியிலும் இல்லாமல் தனியாக இயங்கி வந்தார். இந்நிலையில், எவ்வளவுநாள் தனித்து இயங்குவது? என்று யோசித்து கொண்டிருந்த சசிகலா புஷ்பாவை, தென்மாவட்டத்தை சேர்ந்த சிலர், உசுப்பிவிட்டு தனி அணி ஒன்றை உருவாக்க சொல்லி இருக்கின்றனர்.
ஏற்கனவே, தனி கட்சி தொடங்கும் நிலையில் இருந்த சசிகலா புஷ்பா, அதை தற்காலிகமாக ஒத்தி போட்டிருந்தார். இந்நிலையில், தனி கட்சி தொடங்கி அவஸ்தை படுவதைவிட, அதிமுகவில் உள்ள சில எம்.எல்.ஏ க்களை தம் பக்கம் வைத்துக் கொண்டு, ஒரு தனி அணியாக செயல்படுவதே நல்லது என்று அவர் முடிவு செய்துள்ளார்.
சசிகலா சிறைக்கு சென்ற சில நாட்களில், சசிகலா அணியானது, எடப்பாடி அணியாக மாறியது. தற்போது அமைச்சர்களுடன், பெரும்பாலான எம்.பி, எம்.எல்.ஏ க்கள் எடப்பாடி அணியில் உள்ளனர். எடப்பாடி அணியின் கை ஓங்கியதையடுத்து, திகார் சிறைக்கு சென்று வந்த உடனேயே தினகரன், தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்டும் வகையில், 34 எம்.எல்.ஏ க்கள், 5 எம்.பி க்களுடன் தனக்கென ஒரு தனி அணி என கொண்டவன் இல்லாத வீட்டில் கண்டவன் எல்லாம் அதிகாரம் செய்வான் என்பது போல, ஜெயலலிதா என்ற ஆளுமை உள்ள ஒரு தலைவர் அதிமுகவில் இல்லாததால், அக்கட்சி பல்வேறு அணிகளாகி, ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள்.