Jai bhim வீட்டைவிட்டு வெளியேற முடியாது... ஜெய் பீம் இயக்குநருக்கு காடுவெட்டி குரு மகன் கடும் எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Nov 12, 2021, 5:55 PM IST
Highlights

கலசகுண்டலத்தையும், குருமூர்த்தி என்ற பெயரையும் தேவையில்லாமல் ஜெய்பீம் திரைப்படத்திற்கு இயக்குநர் ஏன் கொண்டு வந்தார் என்பதே எனது கேள்வி. 

ஜெய் பீம் படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவு படுத்தியதாக தொடரும் எதிர்ப்பு முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. நேற்று முன் தினம் அன்புமணி சூர்யாவுக்கு 9 கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு சூர்யாவும் விளக்கம் அளித்திருந்தார். இடையில் விசிகவினரும் சூர்யாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பகிர்ந்து இருந்தனர். 

ஆனாலும் சர்ச்சை ஓய்ந்ததாக இல்லை. இந்நிலையில் தனது காவல்துறை அதிகாரிக்கு தனது தந்தையின் பெயரை சூட்டியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் காடுவெட்டி குருவின் மகனான கனலரசன். 

’’ஜெய்பீம் திரைப்படத்தை பொறுத்தவரை அது ஒரு நல்ல படம். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், அந்தோணிச்சாமி கேரக்டருக்கு குருமூர்த்தி என்ற பெயரை சூட்ட வேண்டியதன் அவசியம் என்ன வந்தது என்பது தான் எங்கள் கேள்வி. இரண்டு சாதிகளுக்குள் சண்டையை உருவாக்க முயன்றிருக்கிறார் ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல். முன்பு போல் இரண்டு சாதிகளுக்குள் நாங்கள் மோதிக்கொண்டிருக்க மாட்டோம். சட்டப்பூர்வமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ள முடியுமோ அந்த நடவடிக்கையை இயக்குநர் த.செ.ஞானவேல் போன்ற நபர்கள் மீது எடுப்போம்.

நடிகர் சூர்யா நிறைய நல்லது செய்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நிறைய பிள்ளைகளை படிக்க வைக்கிறார் என்றும் அறிந்திருக்கிறேன். அதனால் அவரை நல்ல மனுஷனாக தான் நான் பார்க்கிறேன். சூர்யாவுக்கு இதை நான் எச்சரிக்கையாக சொல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தாக்கி எடுக்கப்பட்டுள்ள இது போன்ற திரைப்படங்களில் நடித்தால் அவர் மீது மக்கள் வைத்துள்ள மரியாதை நிச்சயம் குறைந்துவிடும்.

இதை நடிகர் சூர்யா சிந்தித்துப் பார்த்து தனது தவறை திருத்திக்கொள்வார் என நம்புகிறேன். இல்லையென்றால் அவரது ரசிகர்களே அவரை மதிக்காத சூழல் உருவாகும்.

அந்தோணிசாமி என்ற பெயர் கிறிஸ்துவ பெயராக இருப்பதால் அதை சூட்ட இயக்குநர் ஞானவேலுக்கு பயமாக இருந்ததா எனத் தெரியவில்லை. கலசகுண்டலத்தையும், குருமூர்த்தி என்ற பெயரையும் தேவையில்லாமல் ஜெய்பீம் திரைப்படத்திற்கு இயக்குநர் ஏன் கொண்டு வந்தார் என்பதே எனது கேள்வி. எல்லா நேரமும் நாங்கள் பொறுமையாக இருக்கமாட்டோம். இரண்டு சமுதாயத்திற்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இயக்குநர் ஞானவேலின் செயல்பாடுகள் உள்ளன.

ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளராகவும் இருக்கிறார் சூர்யா. இதனால் அவர் நடிப்பு, பிஸினஸ் என்கிற ரீதியில் பார்க்கிறார். இயக்குநர் த.செ.ஞானவேல் இனியும் தொடர்ந்து ஒரு சமுதாயத்தை இழிவுப்படுத்த வேண்டும் என நினைத்தார் என்றால் அவர் வீட்டை விட்டு வெளியவே வர முடியாத சூழல் உருவாகும்’’ என அவர் எச்சரித்துள்ளார்.

click me!