நிர்வாக திறமை இல்லாத ஸ்டாலின் அரசு.. வெள்ள பாதிப்புக்கு அவரே பொறுப்பு.. சுழற்றி அடிக்கும் எடப்பாடியார்..!

By vinoth kumarFirst Published Nov 12, 2021, 5:11 PM IST
Highlights

சென்னை மாவட்டத்தில் இருந்து 160 பொறியாளர்கள் மற்ற மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது அனுபவம் இல்லாத புதிய பொறியாளர்களை நியமித்ததால் அவர்களுக்கு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எங்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது? அதனை எப்படி வெளியேற்ற வேண்டும் என்ற அம்சங்கள் தெரியவில்லை.

ஸ்டாலின் சென்னை மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது என்ன செய்தார்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட யானைகவுனி, திருவொற்றியூர், ஆர்.கே.நகர், மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தார். அதன், பின்னர் கொளத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினர். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- முதல்வர் தொகுதி கொளத்தூரிலேயே மழை நீர் தேங்கி நிற்கிறது. அதையே இன்னும் வெளியேற்றவில்லை. முதல்வர் தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கவில்லை. அதிமுக மீது குற்றம்சாட்ட வேறு காரணம் கிடைக்காததால் ஸ்டார்ட் சிட்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் குறை கூறுகிறார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை சரியாக மேற்கொள்ளவில்லை.  

ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்கள் மீது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் இருந்து 160 பொறியாளர்கள் மற்ற மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது அனுபவம் இல்லாத புதிய பொறியாளர்களை நியமித்ததால் அவர்களுக்கு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எங்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது? அதனை எப்படி வெளியேற்ற வேண்டும் என்ற அம்சங்கள் தெரியவில்லை.

திறமையான அரசாங்கம் இல்லாததால்தான் 500க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனை மறைக்கத் தான் அதிமுக அரசை அவர்கள் குறை கூறி வருகிறார்கள். பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர்  முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தவில்லை. சென்னை தியாகராயநகரில் மழைநீர் தேங்க திமுக அரசு தான் காரணம். ஸ்டாலின் அரசு நிர்வாகத் திறமை இல்லாத அரசு. ஸ்டாலின் சென்னை மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது என்ன செய்தார்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

நியாய விலை கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ள பாதிப்பில் அதிமுக அரசு மீது பழிபோட்டு திமுக அரசு தப்பிக்க பார்க்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2000 வழங்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். 

click me!