பத்திரப்பதிவெல்லாம் நடக்கும்போது சித்திரை திருவிழா தடை படலாமா.? அபசகுனத்தை தவிர்க்க மாற்று வழி சொல்லும் மக்கள்

By Thiraviaraj RMFirst Published Apr 23, 2020, 7:03 PM IST
Highlights

சித்திரை திருவிழா மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால் கூட்டத்தை கூட்டாமல் பட்டர்களை மட்டுமே வைத்து பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சித்திரை திருவிழா மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால் கூட்டத்தை கூட்டாமல் பட்டர்களை மட்டுமே வைத்து பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா சித்ரா பவுர்ணமியை ஒட்டி 18 நாட்கள் நடைபெறும். மீனாட்சி திருக்கல்யாணமும், தேரோட்டமும், கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபவமும் காண கண்கோடி வேண்டும். சுமார் 10 லட்சம் மக்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவி வருவதால் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் மே 7ஆம் தேதி கள்ளழகர் வைகையில் இறங்குவார் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அந்தத் திருவிழா தடை செய்யப்பட்டுள்ளது. 

சித்திரை திருவிழாவின் 8வது நாளான்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். அன்னைக்கு முடி சூட்டுவதற்காக ராயர் கிரீடம் எனப்படும் வைரக் கிரீடமும் செங்கோலும் அனுக்ஞை விநாயகர் சந்நிதியில் இருந்து கொண்டு வரப்படும். அன்றைய தினம் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளும் மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, கிரீடம் சூட்டி, செங்கோலும் வழங்கப்படும். பின்னர் மீனாட்சிக்கு உரிய வேப்பம்பூ மாலையும் மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்படும். அன்றைய தினம் முதல் மதுரையில் மீனாட்சி ஆட்சி தொடங்குவதாக ஐதீகம். திருக்கல்யாணமும் தேரோட்டமும் திருவிழாவின் பத்தாம் நாள் மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும். 

அதற்கு மறுநாள் மீனாட்சி, பிரியாவிடை சமேதராக சுந்தரேஸ்வரர் பிரம்மாண்ட தேரில் ஏறி நான்கு மாட வீதிகளிலும் வலம் வருவதை நான்கு மாட வீதிகளிலும் கூடி நின்று மக்கள் தரிசிப்பார்கள். கள்ளழகர் வருகை இந்த திருமணத்தை காணவும், வைகை ஆற்றில் தனக்காக தவம் இருக்கும் மாண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவதற்காகவும் அழகர்மலையில் இருந்து இறங்கி தங்கப்பல்லாக்கில் மதுரைக்கு வரும் கள்ளழகரை தல்லாகுளத்தில் எதிர்கொண்டு அழைப்பார்கள் பக்தர்கள். இதற்காக 40 நாட்கள் விரதம் இருந்து கள்ளழகர் வேடம் போட்டு வருவார்கள். 

இந்த ஆண்டு எதுவுமே நடைபெறப்போவதில்லை. இதனால் நூற்றாண்டுகாலமாக நடந்த இந்த திருவிழாவை காணமுடியாமல் தவிக்கப்போகிறார்கள் மக்கள். சித்திரை திருவிழா நடந்தால் மட்டுமே அதனையொட்டிய தேர் திருவிழா நடைபெறும். அழகர் ஆற்றுக்குள் இறங்கும்போது அவர் என்ன நிறத்தில் பட்டு உடுத்தி இருக்கிறார் என்பது அப்பகுதி மக்களால் உற்று நோக்கப்படும். பச்சை நிறத்தில் பட்டு உடுத்தி இருந்தால் விளைச்சல் நிறைந்து அந்த ஆண்டு சுபிட்சமாக இருக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. 

இதுவரை எக்காரணம் கொண்டும் சித்திரை திருவிழா தடைபட்டதே இல்லை என்பதால் அடுத்து என்ன நிகழுமோ என மக்கள் பதற்றத்தில் இருக்கின்றனர். சித்திரை திருவிழா என்பது வெறும் ஆடிப்பாடி கொண்டாடும் விழா மட்டும் அல்ல. இது மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால் மாற்று வழியை முன் வைக்கிறார்கள் மதுரையை சேர்ந்த பிரமுகர்கள். அதாவது சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு மக்கள் கூட, அனுமதிக்காமல், இந்த விழாவை பட்டர்களை மட்டும் வைத்து போலீஸ் பாதுகாப்புடன் நடத்த வேண்டும். பல நூற்றாண்டுகாலமாக கொண்டாடப்படும் இந்தப்பண்டிகையை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது, மக்கள் கூடினால் தானே பாதுகாப்பு உள்ளிட விவகாரங்கள் கிளம்பும். ஆகையால் மக்களுக்கு அனுமதி அளிக்காமல் விழாவை மட்டும் பட்டர்களை வைத்து நடத்த வேண்டும். 

பத்திரப்பதிவு அலுவலகங்கள், அத்தியாவசப் பொருட்கள் சப்ளை உள்ளிட்ட தவிர்க்க முடியாத பட்டியலில் சேர்த்து சித்திரை திருவிழாவை நடத்த வேண்டும். ஆட்சியாளர்கள் மனது வைத்தால் விழாவை நடத்த முடியும். எப்படியாவது இந்த விழா நடைபெற வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருக்கும் மக்களும் இந்த விழ்ழவை தவிர்த்து வீட்டிலிருந்து பக்தி உணர்வை காட்டி ஆதரவு அளிப்பார்கள். பல லட்சம் மக்களின் நம்பிக்கையையும், திருபதியையும் மனதில் கொண்டு பாதுகாப்புடன் மக்கள் கூட்டமின்றி சித்திரை திருவிழாவை நடத்த மாவட்ட ஆட்சியர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆட்சியாளர்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பளிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

click me!