பிரதமர் மோடியை ராகுலால் தோற்கடிக்க முடியாதா.? ராகுலை அசிங்கப்படுத்திய மம்தா கட்சிக்கு காங்கிரஸ் பதிலடி.!

By Asianet TamilFirst Published Sep 19, 2021, 9:19 AM IST
Highlights

பிரதமர் மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியால் தோற்கடிக்க முடியாது என்று கருத்து தெரிவித்த திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்திருக்கிறது.
 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சுதிப் பந்த்யோபத்யாய் பேசியது டெல்லி அரசியலில் சூட்டைக் கிளப்பியது. “2024-ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்கட்சிகளின் தலைவராக மம்தா பானர்ஜியே இருக்க வேண்டும். மம்தாவே எதிர்கட்சிகளின் ஒருங்கிணைந்த தலைவராக இருக்க வேண்டும். ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவராக தன்னை மேம்படுத்திக் கொள்ளவில்லை. பிரதமர் மோடியை தோற்கடிக்கும் திறன் ராகுல் காந்திக்கு கிடையாது. தேர்தலில் ராகுல் காந்தியால் மோடியை வீழ்த்த முடியாது” என்று கருத்து தெரிவித்திருந்தார். 
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்திருக்கிறது. அதுதொடர்பாக காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “ஜனநாயகம், அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க பெரும் போராட்டத்தை ராகுல்காந்தி நடத்தி வருகிறார். எனவே, ராகுல்காந்தி மீதான தாக்குதல், தேவையற்றது. இது மலிவான ரசனை. எல்லா கட்சிகள், அவற்றின் தலைமைகளை மதிக்கிறோம். ஆனால், பிற கட்சிகளின் தலைவர்களை இழிவுபடுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை கட்டி எழுப்ப முடியாது. இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒற்றுமைக்கு வேட்டு வைக்கக்கூடாது.” என்று கண்டித்திருக்கிறார்.
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை காங்கிரஸ் கட்சியும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் செய்துவருகின்றன. இந்நிலையில் இக்கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!