”அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ் வாழ்க”!! தேவர் குருபூஜையில் எழுந்த கோஷங்களால் சர்ச்சை… இன்னொரு தர்மயுத்தமா?

By Ganesh RamachandranFirst Published Oct 30, 2021, 4:27 PM IST
Highlights

அம்மா இருந்த இடத்தில் வேறு யாரும் இருக்கக்கூடாது என்று காரணம் சொல்லியே ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு யாரும் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்தனர். அப்படி இருக்கும் போது, “அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ் வாழ்க” என்று தன் ஆதரவாளர்கள் எழுப்பிய கோஷத்தை ஓபிஎஸ் எப்படி கேட்டும் கேட்காமல் கடந்து போனார் என்பதே கேள்வி.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் அமைந்துள்ள தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை மற்றும் மலர் கிரீடம் அணிவித்தார். பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடம் கோவிலாக பார்க்கப்படுகிறது. எனவே தான் சமீபத்தில் தன் மனைவி இறந்ததால் ஓபிஎஸ் அங்கு செல்லவில்லை. இந்த நிகழ்வின்போது அங்கிருந்த தொண்டர்கள் பலரும் “அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ் வாழ்க” என்று கோஷமெழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கழக நிர்வாகிகள் முடிவெடுப்பர் என ஓபிஎஸ் மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் உடைந்த அதிமுகவின் இரு அணிகள் இணைவதற்கு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை அதிமுகவில் எந்த காலத்திலும் சேர்க்கக் கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்ததே ஓபிஎஸ் தான். அப்படியிருக்கும் நிலையில் அவரது இந்த திடீர் நிலைமாற்றம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. அவரது இந்தக் கருத்திற்கு உடனடியாக எதிர்வினையாற்றினார் ஈபிஎஸ். சசிகலாவுக்கு அதிமுவில் எப்போதும் இடமில்லை என கூறியிருந்தார். இவர்கள் இடையிலான இந்தப் பனிப்போர் அரசியல் களத்தின் பிரதான விவாத பொருளானது. இந்நிலையில் தான் “அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ்” என்ற கோஷம் அவரது ஆதரவாளார்களால் எழுப்பப்பட்டுள்ளது.

அம்மா இருந்த இடத்தில் வேறு யாரும் இருக்கக்கூடாது என்று காரணம் சொல்லியே ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு யாரும் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்தனர். அப்படி இருக்கும் போது, “அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ் வாழ்க” என்று தன் ஆதரவாளர்கள் எழுப்பிய கோஷத்தை ஓபிஎஸ் எப்படி கேட்டும் கேட்காமல் கடந்து போனார் என்பதே அனைவரின் கேள்வி. ஒருவேளை ஓபிஎஸ் தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டுக்கொள்கிறாரா என்று எதிர்தரப்பினர் பேசத்தொடங்கிவிட்டனர்.

தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் யார் எதிர்கட்சித் தலைவர் என்ற பிரச்சனை எழுந்தபோது, தன்னை எதிர்கட்சித் தலைவராக்குங்கள் அல்லது கட்சியின் ஒற்றைத் தலைமையாக தன்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று ஓபிஎஸ் ஈபிஎஸ்சுடன் நேரடியாகவே மல்லுக்கட்டியதாக பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்போதும் அதே கட்சித் தலைமைக் கனவை மையமாக வைத்தே இந்தக் கோஷம் எழுப்பப்பட்டதா? அதிமுக உட்கட்சி தேர்தல் கட்சி மீண்டும் உடைய காரணமாக இருக்கும் என்ற அமமுகவினரின் கணக்கு சரியானதா? என்ற பல கேள்விகள் எழுகின்றன.

ஏற்கனவே வேட்பாளர் தேர்வு, கட்சி நிர்வாகிகள் நியமனம், எதிர்க்கட்சி தலைவர், கட்சி கொறடா உள்ளிட்ட பதவிகளில் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காததால் விரக்தியில் இருப்பதாக சொல்லப்படும் ஓபிஎஸ், இன்னொரு தர்மயுத்தத்துக்கு தயாராகிறாரா என்றும் தொண்டர்கள் பேசத்தொடங்கிவிட்டனர். அதிமுகவுக்குள் வட மாவட்டம் vs தென் மாவட்டம் என்ற போர் நடந்துகொண்டிருப்பதை அரசியலை உற்றுநோக்கும் யாரும் எளிதில் புரிந்துகொள்ளமுடியும். தென்மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் மறுக்கப்படும் நிலையில், தேவர் பெருமகனார் பிறந்ததினத்தன்று எழுந்துள்ள “பொதுச்செயலாளர் ஓபிஎஸ்” என்ற கோஷம் வெறும் உணர்ச்சிகளின் வெளிப்பாடா அல்லது அடுத்த அரசியல் நகர்வுக்கான தொடக்கமா என்பது இன்னும் சில வாரங்களில் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

click me!