அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்படுத்துகிற பஜ்ஜெட்... கே.எஸ்.அழகிரி புகழாரம்!!

Published : Mar 18, 2022, 07:10 PM IST
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்படுத்துகிற பஜ்ஜெட்... கே.எஸ்.அழகிரி புகழாரம்!!

சுருக்கம்

தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்படுத்துகிற வகையில் நிதிநிலை அறிக்கை இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்படுத்துகிற வகையில் நிதிநிலை அறிக்கை இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்து ஆண்டுக்கால அதிமுக ஆட்சியின் தவறான நிதி மேலாண்மையின் காரணமாக, 2021ல் ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியும், பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூபாய் 3.50 லட்சம் கோடியும் என ஏறத்தாழ ரூபாய் 10 லட்சம் கோடி கடன் சுமையை திமுக தலைமையிலான ஆட்சிக்கு விட்டுச் செல்லப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசு பதவியேற்ற நாளிலிருந்து  சாதனைகளைப் படைத்து வருகிறது. இதனால் தமிழகம் தலைநிமிர்ந்து பீடு நடை போட்டு வருகிறது. இதை உறுதி செய்கிற வகையில் தமிழகத்தின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை சமூக நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூபாய் 4,816 கோடி நிதி ஒதுக்கியிருப்பதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக ரூபாய் 1,000 கோடியும், பேரிடர் மேலாண்மைத் துறைக்கு ரூபாய் 7,400 கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கக் கூடியது. சுய உதவிக்குழு, வேளாண் கடன் வழங்க ரூ. 4,130 கோடியும், நகைக் கடன் தள்ளுபடிக்காக ரூ. 1,000 கோடியும், வட்டியில்லா பயிர்க் கடன் திட்டத்திற்கு ரூ. 200 கோடியும், ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூ 2,800 கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பது கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.

7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவம், பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான முழுச் செலவை ஏற்க 204 கோடி ஒதுக்கீடு, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை படித்து, உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 உதவித் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழமையான திருக்கோயில்களை புனரமைத்து, சீரமைக்க 100 கோடி, மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்கு 340 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் சிறந்த செயல்பாடு காரணமாக சமீபகாலமாகத் திருக்கோயில்கள் நிர்வாகம் புத்துணர்வு பெற்றுள்ளது. தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்படுத்துகிற வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களைப் பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!