
தமிழக அரசின் புதிய திட்டங்கள்
தமிழக நிதி நிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் தாக்கல் செய்துள்ளார். இந்த நிதி நிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, உயர்கல்வி படிக்கும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும், தனியார் பள்ளியில் தமிழ் வழி கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இலவச புத்தகம், தமிழ்நாடு ஒலிம்பிக் தங்க பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு, முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கு 1,547 கோடி நிதி ஒதுக்கீடு, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு ரூ. 817 கோடி நிதி ஒதுக்கீடு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு 2,800 கோடி ஒதுக்கீடு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் திறன் வளர்ச்சிக்கு 50 கோடி நிதி ஒதுக்கீடு, புதியதாக 18,000 வகுப்பறைகள் 1300 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இருந்த போதும் திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறது.
மக்களை ஏமாற்றும் பட்ஜெட்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை,கல்விக் கட்டணம் ரத்து, பொது விநியோகத் திட்டத்தின் மூலம் உளுத்தம் பருப்பு மற்றும் கூடுதல் சர்க்கரை வழங்குவது, அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிலையங்களில் 3.5 இலட்சம் காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட திமுக தேர்தல் வாக்குறுதி குறித்து நிதிநிலை அறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லையென தெரிவித்தவர் இந்த பட்ஜெட் மக்களை ஏமாற்றும் பட்ஜெட்டாக இருப்பதாக கூறியிருந்தார்.
மத்திய அரசு திட்டங்களுக்கு பெயர் சூட்டிய மாநில அரசு
இந்தநிலையில் தமிழக பட்ஜெட் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளதாக கூறியுள்ளார், திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை இன்றும் நிறைவேறவில்லையென தெரிவித்துள்ளார். தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத பகல் கனவு பட்ஜெட்டாக அமைந்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியினை பயிலும் போது ரூ. 1000 வழங்கப்படும் என தமிழ அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் இது பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதே போல பாமக, தமாக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என கேள்வி எழுப்பியுள்ளனர்.