"தம்பி, உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்க இந்த நாட்டுக்கு அவசியம்" : கண்ணீர் விட்டு கதறும் ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Aug 20, 2020, 12:35 PM IST
Highlights

தம்பிக்கு, பாசம் நிறைந்த “அண்ணனாக” என்னிடம் கடைசியாகச் சொன்ன வார்த்தை - “தம்பி, உங்கள் உடல்நலத்தைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நலமாக இருப்பதுதான் இன்று இந்த நாட்டுக்கு இப்போது தேவை” என்று பிறப்பித்த அன்புக் கட்டளைதான்!

திமுக வின்  அதிரடி பேச்சாளர்,முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் காலமானார்."இது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி:-

"திராவிட முன்னேற்றக் கழகத்தின் “இடி” “மின்னல்” “மழை”-யில், ஓயாத இடி முழக்கமாகத் திகழ்ந்த - கழகத்தின் சிங்கச் சிப்பாய்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சர் மற்றும் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான அண்ணன் திரு. ரகுமான்கான் அவர்கள் மறைவெய்திவிட்டார் என்ற துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்கும் பெரும் வேதனைக்கும் உள்ளாகி நிற்கிறேன். ஆறுதல் கூறவோ - இரங்கல் தெரிவிக்கவோ ஆற்றலின்றி  என் இதயம் அழுகிறது; திறனிழந்து திண்டாடுகிறது;  உள்ளம் பதறுகிறது. திராவிட மாணவர் முன்னேற்றக் கழகக் காலந்தொட்டு, கழகத்திற்காக அவர் ஆற்றிய அரும் பணிகள் –என் கண் முன்னே நிற்கும் அவரது ஆலோசனைகள் –இவற்றுக்கிடையில், கனத்த இதயத்துடன்- அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய அனைவரும் அண்ணன் ரகுமான்கான் அவர்களின் கம்பீரமான உரையால் - காந்த சக்திமிக்க கருத்துக்களால் கவரப்பட்டவர்கள். முன்னாள் சபாநாயகர் காளிமுத்து, கவிஞர் நா.காமராசன், முன்னாள் துணைவேந்தர் திரு. ராமசாமி ஆகியோருடன் தாய்மொழியாம் தமிழைக் காப்பாற்றும் இந்தி எதிர்ப்புப் போரில் மாணவர் பருவத்திலேயே - போர்ப்பரணி பாடி - நெஞ்சம் நிமிர்த்தி நின்றவர். சட்டக்கல்லூரியில் அண்ணன் திரு. துரைமுருகன், ஆசிரியர் திரு.முரசொலி செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. வேங்கடபதி போன்ற கொள்கை வீரம் மிக்க தலை மாணாக்கர்களுடன் இணைந்து - தடந்தோள் தட்டி - மாணவர் சமுதாயத்திற்கு மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் களத்தில், கழக மாணவரணியில் பம்பரமாக - பம்பரத்தை விட வேகமாகச் சுற்றிச் சுழன்று பணியாற்றியவர்.

 1977-ல் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினரான அண்ணன் ரகுமான் கான் அவர்கள், தலைவர் கலைஞர் அவர்கள் வெற்றிபெற்ற சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். 5 முறை சட்டமன்ற உறுப்பினர் - அதில் ஒரு ஐந்து ஆண்டு தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்த் துறை அமைச்சராக, கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் அமைச்சரவையில்  செயல்பட்டு - தமிழக வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர். இருமுறை சிறுசேமிப்புத் துறையின் துணைத் தலைவராக இருந்த அவர், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக இருந்து எனக்கு அவ்வப்போது ஆலோசனை தரும் அட்சயபாத்திரம்! 

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்களுடனான ‘ஆன்லைன்’ ஆலோசனையில் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது இணைப்பு துண்டித்துப் போனது; ஆனாலும் எனது ‘வீடியோ காலில்’  தனியாக வந்து பேசி, எனக்கு கட்சி தொடர்பாக சில ஆலோசனைகளை வழங்கி - தம்பிக்கு, பாசம் நிறைந்த “அண்ணனாக” என்னிடம் கடைசியாகச் சொன்ன வார்த்தை - “தம்பி, உங்கள் உடல்நலத்தைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நலமாக இருப்பதுதான் இன்று இந்த நாட்டுக்கு இப்போது தேவை” என்று பிறப்பித்த அன்புக் கட்டளைதான்! பதிலுக்கு நானும் அவரிடம், “அண்ணே! நீங்களும் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சிறுபான்மைச் சமுதாயத்திற்கு மட்டுமின்றி - கழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் நீங்கள் மிகவும் முக்கியம்” என்று கூறினேன். 

அந்த உரையாடலின் உணர்ச்சிப் பெருக்கில் அவர் கண் கலங்கிய காட்சியைக் கண்டேன். ஆனால் அவர் இன்று என்னைக் கண்ணீர் மல்க வைத்து விட்டு - என்னை விட்டு மட்டுமின்றி-  இந்த இயக்கத்தின் கோடானுகோடித் தோழர்களிடமிருந்தும் பிரியா விடை பெற்றுச் சென்று விட்டார் என்பதை என் மனம் அறவே ஏற்க மறுக்கிறது. 

முத்தமிழறிஞர் கலைஞரின் “போர்வாளான” முரசொலியில் இனி அண்ணன் ரகுமான்கான் எழுதும்  கட்டுரைகளை எங்குபோய்த் தேடிப் படிப்பேன்?  நான் எடுக்கும் நடவடிக்கைகளை அவ்வப்போது தொலைபேசியில் அழைத்துப் பாராட்டுவாரே - அந்த அண்ணனின் குரலை இனி எங்குதான் கேட்பேன்? அவர் அளித்தது போன்ற அற்புதமான ஆலோசனைகளை இனி எந்த அண்ணனிடம் பெறுவேன்? ஆற்றல் மிக்க - அன்பு மிக்க - இந்த இயக்கத்தின் ஆணிவேர்களில் ஒருவரான  அண்ணனை இழந்து பரிதவிக்கிறேன்; இயக்கத் தோழர்களுக்கு ஆறுதல் சொல்ல இயலாமல் தத்தளித்து நிற்கிறேன். அண்ணனின் மூச்சு நின்று இருக்கலாம். ஆனால் அவரின் “முரசொலி” கட்டுரைகளும் - “முழங்கிய மேடைப் பேச்சுகளும்” என்றும் நம் கண்களிலே இருக்கும்; காதுகளிலே  ஒலித்துக் கொண்டேயிருக்கும். பாசமிகு அண்ணன் ரகுமான்கான் அவர்களின் குடும்பத்திற்கும் - உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!