
சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீடுகளுக்கு மர்ம நபர்கள் சிலர் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல பிரச்சனைகளை காரணம் காட்டி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நீட் தேர்வு பிரச்சனையும் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வை தமிழக மக்கள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், தற்போது நீட் எழுதும் மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்பிரச்சனை தமிழகத்தையே சூடாக்கியுள்ள நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடலூரைச் சேர்ந்த பிரதீப் என்ற பெயரில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மோப்பநாய்கள் உதவியுடன் அங்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் அது புரளி என தெரியவந்துள்ளது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்-அமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதே போன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கும்பிரதீப் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார் தீவிர சோதனை நடத்தி அது புரளி என்பதைக் கண்டறிந்தனர்.
அடுத்தடுத்து வி.வி.ஐ.பி.வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.