
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏக்களுக்குள் பொது மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் தங்கள் சொந்த தொகுதிக்குள் நுழைய முடியாமல் தவித்து வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை தமிழக சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் போது 122 எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
ஆனால் சசிகலாவுக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தொகுதி மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் 122 எம்எல்ஏக்களும் தொகுதிக்கு செல்லாமல் கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி கும்மாளம் போட்டதால் அவர்கள் மீது பொது மக்கள் கடுப்பில் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிக்குள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.அப்படி சென்றாலும் போலீஸ் பாதுகாப்புடன் தான் செல்லமுடிகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான செங்கோட்டையனுக்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.பொது மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்ட செங்கோட்டையன் அகால மரணமடைந்து விட்டதாக போஸ்டர்களை ஒட்டி அப்பகுதிமக்கள் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.
காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு, தொகுதிக்குள் நுழையக்கூடாது என தொகுதி முழுவதும் வால் பேர்ஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
அதிமுகவை சசிகலா குடும்பத்தினரிடம் அடகு வைத்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்களை ஊருக்குள் வரவிடாமல், மீண்டும் கூவத்தூர் விடுதிக்கே திருப்பி அனுப்புவோம் என அம்மாவட்ட மக்கள் கூறியுள்ளனர்.
இதேபோன்று வேலூர் புதுப்பேட்டை அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் கே.சி.வீரமணிக்கு பொது மக்கள் கறுப்புக் கொடி காட்டினர். அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் பொது மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.