
புதுச்சேரி வரவுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கருப்புக்கொடி காட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்க்கட்சிகளின் பாஜகவுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியை இந்தியாவின் இணைப்பு மொழியாக அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என அமித்ஷா பேசியிருந்தார். அவரின் பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள் அமித்ஷாவின் இந்த பேச்சை இந்தி திணிப்பு முயற்சி என கண்டித்து வருகின்றன.
அமித்ஷா தொடர்ந்து இப்படி பேசினால் இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும் என்றும் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசியல் கட்சிகள் எச்சரித்துள்ளன. இந்நிலையில் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுவை வரவிருக்கிறார். உலகில் அவருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்த புதுவை காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டன.
அப்போது தமிழைப் புறக்கணித்து இந்தியை கட்டாயம் என்று அறிவித்து தமிழர்களுக்கு அமித்ஷா துரோகமிழைத்துள்ளதாகவும், புதுச்சேரி மாநிலத்தின் நிதி நெருக்கடியை தீர்ப்போம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த அமித்ஷா அதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், புதுச்சேரி மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் அனைத்துக் கட்சிகளாலும் நீண்டகாலமாக புறப்பட்டு வரும் மாநில அந்தஸ்து தர அமிர்ஷா மறுத்து வருகிறார் என்றும், எனவே வரும் 24-ஆம் தேதி அவர் புதுச்சேரிக்கு வரும்போது அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் காங்கிரஸ், திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
எதிர்க்கட்சிகளின் இந்த அறிவிப்பு பாஜகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஒன்றுகூடி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார். அது நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியது. அதேபோல் நேற்று முன்தினம் தமிழ் ஆளுநருக்கு எதிராக திமுகவின் கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி போராட்டம் நடத்தியுள்ளனர். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்தான் புதுவை வரவுள்ள அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டப்படும் என எதிர்க்கட்சிகள் அறிவித்திருப்பது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.