
மெர்சல் திரைப்பட வெற்றிக்கு பாரதிய ஜனதாதான் காரணம் என்றால் விஜயும் அவரது தந்தையும் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தீபாவளியன்று விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரி குறித்தும் டிஜிட்டல் இந்தியா குறித்தும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இதற்கு பாஜகவினர் பலரும் கடும் கண்டங்களை தெரிவித்து வந்தனர். அதில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஒரு படி மேலே போய் விஜயின் பெயரை ஜோசப் விஜய் என மதத்தை முன்னிறுத்தி சுட்டி காண்பித்திருந்தார்.
இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்வலை கிளம்பியது. இதையடுத்து ஹெச். ராஜாவின் உண்மையான பெயர் ராஜா ஹரிஹர ஷர்மா என அனைவராலும் விமர்சிக்கப்பட்டது.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், தற்போது ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தனது வோட்டர் ஐடியை புகைப்படம் எடுத்து பதிவிட்டிருந்தார்.
இதனிடையே மெர்சலின் மாபெரும் வெற்றிக்கு பாஜகவே காரணம் என விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், மெர்சல் சர்ச்சை அந்த படத்திற்கு விளம்பரமாக அமைந்ததாக கூறப்படுவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஹெச்.ராஜா, மெர்சல் வெற்றிக்கு அதிகமாக நானோ அல்லது பாஜகவோ காரணம் என்று நினைத்தால் விஜய் ஒரு நன்றி அறிக்கை கொடுப்பார் என கருதுவதாக தெரிவித்தார்.
மெர்சல் வெற்றிக்கு நான் காரணமாக இருந்தால் நன்றி சொல்ல வேண்டுமில்லையா? விஜய் சொன்னாலும் சரி அல்லது அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நன்றி சொன்னாலும் சரி என தெரிவித்தார்.