அணை பாதுகாப்பு சட்டத்தை ஆதரித்தும், நதிகளை தேசியமயமாக்கல் என்ற வார்த்தைகளை இணைத்தால் தீர்மானத்திற்கு ஆதரவு தருவதாக தெரிவித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
காவிரி நீர்- சட்டப்பேரவையில் தீர்மானம்
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், கர்நாடக மாநில அரசு உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. செயற்கையான நெருக்கடியை கர்நாடக மாநில அரசு உருவாக்கியுள்ளதாக குற்றம்சாட்டினார்.
எனவே காவிரியில் உரிய தண்ணீர் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து பேசிய அரசியல் கட்சிகள் தீர்மானத்தை வரவேற்று பேசிய நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசுகையில், காங்கிரஸ் அரசை விமர்சிக்காமல் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் அரசியல் உள்ளதோ என எண்ண தோன்றுகிறது என குறிப்பிட்டார்.
பிட்டு பிட்டா தீர்வு காண முடியாது
தொடர்ந்து பேசிய அவர் அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார். இதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிய சபாநாயகர் அப்பாவு, காவிரி தண்ணீர் வேண்டுமா வேண்டாமா? உங்கள் கட்சியின் நிலைபாடு என்ன? என்பதை மட்டும் பதிவு செய்யுங்கள் என குறிப்பிட்டார். அதற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், ஒரு பிரச்சனைக்கு பிட்டு பிட்டா தீர்வு காண முடியாது. அணை பாதுகாப்பு சட்டத்தை ஆதரிப்போம் என்ற வார்தையை சேர்த்து தீர்மானம் கொண்டு வந்தால் ஏற்போம் என கூறினார். தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, இது பாராளுமன்றத்தில் உள்ள எம்பிக்கள் பேச வேண்டியது, இது தீர்மானத்தில் இல்லை, தண்ணீர் திறக்க வலியுறுத்தி தான் தீர்மானம் எனவே முடிவை சொல்லுங்கள் என கூறினார்.
ஏமாற்றும் நாடகமாக தீர்மானம்
தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் முழுமையான தீர்மானமாக இல்லாத காரணத்தால் வெளிநடப்பு செய்கிறோம் என தெரிவித்தார், இதனை தொடர்ந்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், இயலாமையை மறைக்க திமுக அரசு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. தமிழகத்தின் உரிமைக்காக என்றும் குரல் கொடுப்போம். கர்நாடகத்தில் பா.ஜ.க ஆண்ட வரை இதுபோன்ற பிரச்சினை வரவில்லை. மக்களை ஏமாற்றும் நாடகமாக தீர்மானத்தை பார்க்கிறோம் என கூறினார்.
இதையும் படியுங்கள்