பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடுகிறது... காவிரி விவகாரத்தில் முக்கிய தீர்மானம்

By Ajmal Khan  |  First Published Oct 9, 2023, 6:17 AM IST

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று  தொடங்குகிறது, நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.


தமிழக சட்டப்பேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் சுமார் ஒரு மாத காலத்திற்கு மேல் நடைபெற்றது.  கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார். சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் 6 மாதங்களில் கூட்டப்பட வேண்டும். அதன் அடிப்படையில் அக்டோபர் 9-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதாக, கடந்த மாதம் 20-ம் தேதி பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். அதன்படி, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்குகிறது.

Latest Videos

undefined

மறைந்த தலைவர்களுக்கு இரங்கல்

அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கற் குறிப்பு வாசிக்கப்படுவதோடு, பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம், வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதன் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. அதனை தொடர்ந்து 2023-24-ம் ஆண்டு கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்யவுள்ளார்.  அதை தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வருவார்.

காவிரி விவகாரத்தில் தீர்மானம்

அந்த தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசவுள்ளனர். அதனை தொடர்ந்து அனைத்துக் கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய  கூட்டம் முடிந்தவுடன் பேரவைக் கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி செய்யப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு அருகில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எதிர்கட்சிகள் நிலைப்பாடு என்ன.?

சட்டப்பேரவை எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நீதிமன்றத்தில் இன்னும் ஒரு சில வழக்குகள் இருப்பதால் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே பல்வேறு விவகாரங்களை வலியுறுத்தி அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் ஐடி சோதனை.. ரூ.2.50 கோடி பறிமுதல்..

click me!