எதிர்க் கட்சிகளின் அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ள திராணியில்லாத பாஜகவும், ஒன்றிய ஆட்சியும் தவறான வழிமுறைகளை பின்பற்றி எதிர்ப்புக் குரலை முடக்கிவிடலாம் என நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை
திமுக மற்றும் ஆம் ஆத்மி எம்.பி வீடுகளில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், திமுக எம்.பி., ஜெகத்ரட்சன் தொடர்புடைய இடங்களில் மூன்றாவது நாளாக ஐ.டி சோதனை நடைபெற்று வருகிறது. இப்போது அமலாக்கத்துறையும் விசாரணை தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினரை குறிவைத்து ஏவப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில் என்ன கண்டறிந்தார்கள்?
என்ன குற்றச்சாட்டு என எந்த விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை. இதிலிருந்தே இது பாஜகவின் அரசியலுக்காக எதிர்கட்சிகளை மிரட்டிடும் மற்றுமொரு அராஜகம் என்பது தெரிகிறது. சில நாட்கள் முன் மணல் கொள்ளை தொடர்பான விசாரணைக்காக பாஜகவை சார்ந்த நபரின் வீட்டுக்கு சென்ற அமலாக்கத்துறை,
ஆரூத்ரா மோசடி தொடர்பு
பாஜக தலைவர்கள் தலையீட்டுக்கு பின் விசாரனையை பாதியில் விட்டு வந்ததே, என்ன காரணம்? ஆருத்ரா நிதி நிறுவனம் செய்த மோசடியில் தொடர்புடைய நபர்கள் ரூ.500 கோடி வரை அரபு அமீரகத்தில் பதுக்கி வைத்திருப்பதாக செய்திகள் உள்ளன. பாஜகவை சார்ந்த சுரேஷ் உள்ளிட்டோர் மீது காவல்துறை நடவடிக்கை உள்ளது ஆனால் மத்திய முகமைகள் கமுக்கமாக இருக்கின்றனவே. எதனால் இந்த அமைதி? அண்மையில் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக இதே போல ரெய்டுகளும், கைதும் ஏவப்பட்டன. ஆனால், அந்த வழக்கில் ஊழல் நடந்திருப்பதாக எந்த ஆதாரத்தையும் அமலாக்கத்துறையால் காட்ட முடியவில்லை. நியூஸ் கிளிக் ஊடகத்தின் மீது யு.ஏ.பி.ஏ சட்டம் ஏவப்பட்டு, ஒட்டுமொத்த செயல்பாடும் முடக்கப்பட்டது ஆனால் முதல் தகவல் அறிக்கை கூட தரப்படவில்லை.
பகல் கனவாகவே முடியும்
நீதிமன்றம் தலையிட்ட பின் வழங்கப்பட்ட அறிக்கையில் எந்த உள்ளீடும் இல்லாமல் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டிருப்பது தெரிந்தது. இதுபோன்ற ரெய்டுகளின் நோக்கம், கட்சிகள் மற்றும் விமர்சகர்களின் அன்றாட செயல்பாட்டை முடக்குவதுதான். பாஜக ஆட்சியில் அமலாக்கத்துறை, ஐ.டி துறை, சி.பி.ஐ போன்ற மத்திய முகமைகள் அனைத்துமே சீரழிக்கப்பட்டு, சட்டத்தின் ஆட்சி மலினப்படுத்தப்படுகிறது. எதிர்க் கட்சிகளின் அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ள திராணியில்லாத பாஜகவும், ஒன்றிய ஆட்சியும் தவறான வழிமுறைகளை பின்பற்றி எதிர்ப்புக் குரலை முடக்கிவிடலாம் என நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும். சி.பி.ஐ.(எம்) இந்தப் போக்கினை வன்மையாக கண்டிக்கிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்