
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘தமிழக கவர்னர் அளித்த தேநீர் விருந்தை மட்டும் முதல்வர் புறக்கணிக்கவில்லை. கவர்னர் மாளிகையில் பாரதியார் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட 11 கோப்புகளை கவர்னரிடம் முதல்வர் வழங்கி இருந்தார். ஆனால், அதை மீண்டும் தமிழக முதல்வருக்கே கவர்னர் திருப்பி அனுப்பினார்.
அதற்கான காரணத்தையும் கவர்னர் கூறி உள்ளார். எனவே, கோப்புகளை திருப்பி அனுப்பியதற்காக கவர்னர் தெரிவித்த காரணத்தை மக்களுக்கு வெள்ளை அறிக்கையாக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட வேண்டும். நரிக்குறவர் இனத்தில் பிறந்த மக்களுக்கு அமைச்சர் பதவி அளித்து அழகு பார்ப்பது பாஜக மட்டும்தான். நரிக்குறவர் மக்களை நேரில் சந்தித்து, புது தட்டில் முதல்-அமைச்சர் சாப்பிட்டு உள்ளார். அப்படி செய்துதான் நரிக்குறவர் மக்களுக்கு நாங்கள் சொந்தம் என்று நிரூபிக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. நரிக்குறவ சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு பாஜகவால் மட்டுமே முடிவும்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு நமது தமிழக முதலமைச்சர் மதிப்பளிக்காதவர். தான் புடித்த முயலுக்க மூன்று கால் என்பது போல் தமிழக மக்கள் கொண்டாடும் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லாதது வருத்தம் அளிக்கிறது. அனைவருக்குமான முதலமைச்சர் என கூறினாலும் தமிழ் புத்தாண்டுக்கு நேற்று அவர் வாழ்த்து சொல்லாதது அவர் மக்கள் மன நிலையிலிருந்து மாறுப்பட்டுள்ளார் என்பதை காட்டுகிறது. தமிழை அதிகமானவர்கள் பேசினால் அதனை இணைப்பு மொழியாக கொண்டுவரலாம் அதற்கு மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது’ என்று கூறினார்.