ரஜினிக்கிட்ட கத்துக்குங்க விஜய் ! சமூக பதட்டத்தை ஏற்படுத்தாதீங்க.. குவைத்தில் கொந்தளித்த தமிமுன் அன்சாரி !

By Raghupati RFirst Published Apr 17, 2022, 11:07 AM IST
Highlights

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. படம் ஹிட் என ஒரு தரப்பும், தோல்வி என மற்றொரு தரப்பினரும் கூறி வரும் நிலையில், துப்பாக்கி திரைப்படத்தை தொடர்ந்து பீஸ்ட் திரைப்படமும் முஸ்லிம்களுக்கு எதிராக விஷத்தை கக்கி உள்ளது என்று முஸ்லீம் இயக்கங்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றது.

குவைத்தில் மஜக சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவை சார்பில் இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ‘முஸ்லிம்கள் அமைதி, சமாதானத்தை நேசிப்பவர்கள். குர்ஆன் இணக்கத்தை உருவாக்குபவரே சிறந்த மனிதர் என்கிறது. தொழுகையை விட சிறந்த அமல் சண்டையிடுபவர்களுக்கு மத்தியில் சமாதானம் செய்வது என்றார்கள் நபிகள் நாயகம் அவர்கள்.

இதை புரியாதவர்கள் இந்த சமூகத்தை  காயப்படுத்துகிறார்கள். தமிழகத்தில் திரைப்படங்கள் வழியே சிலர் வெறுப்பை விதைக்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தை கொச்சைப்படுத்த முனைகிறார்கள். ஏற்கனவே அர்ஜுன், விஜயகாந்த், கமல்ஹாஸன் போன்றவர்கள் இந்த தவறை செய்தார்கள். இப்போது விஜய் இந்த தவறை பீட்ஸ் திரைப்படம் மூலம் செய்துள்ளார். ஏற்கனவே அவரது துப்பாக்கி படம் மூலம் ஏற்பட்ட பிரச்சனையை அவர் சந்தித்துள்ளார்.

இப்பிரச்சனையை நாம் எவ்வாறு கையாண்டோம் என்பது கலைப்புலி.தாணு அவர்களுக்கு தெரியும். இப்போது சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் பதட்டத்தை தூண்டுவதாகவும், அமைதியை குலைப்பதாகவும் இருக்கிறது. திரும்ப திரும்ப ஒரு சமூகத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறார்கள். இது ஒரு கலை அல்லது சினிமா என ஒதுக்கிட முடியாது. அது காலம் முழுக்க மக்களுடன் தொடர்புள்ள ஊடகம். எனவே இதில் தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு பதட்டத்தை தணிக்க உதவ வேண்டும். 

சர்ச்சைக்குரிய காட்சிகளை தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும். முன்பு MGR, சிவாஜி படங்களில் சகோதரத்துவம் ஒங்கும் வகையில் காட்சிகள் இருக்கும். ரஜினிகாந்த் அவர்களின் படங்களிலும் அத்தகைய காட்சிகள் இருந்தது. இப்போது சில நடிகர்கள் பணத்திற்காகவும், பரபரப்பான விளம்பரத்திற்காகவும் இப்படி ஒரு சமூகத்தை கேவலப்படுத்த நினைக்கிறார்கள். எந்த மதத்தையும், சாதியையும், இனத்தையும்  இழிவுப்படுத்தி படம் எடுக்காதீர்கள்.

இயேசுவை இழிவுப் படுத்தினாலும், ராமரை இழிவுபடுத்தினாலும், பெரியாரை இழிவுபடுத்தினாலும் நாங்கள் எதிர்ப்போம். உங்களால் பாபர் மசூதி இடிப்பை படமாக எடுக்க முடியுமா? முள்ளிவாய்க்கால் பேரழிவை படமாக்க முடியுமா ? 2002 ல் நடந்த குஜராத் இனப்படுகொலைகளை படமாக எடுப்பீர்களா? உண்மைகளை வைத்து படம் எடுங்கள். வாழ்வியலை, வரலாற்றை படமாக்குங்கள். கற்பனைகளில் மக்களை மூழ்கடிப்பதை, வரலாற்றை திரிப்பதை, ஒரு சமூகத்தை சீண்டுவதை நிறுத்துங்கள்’ என்று பேசினார்.

இதையும் படிங்க : சாப்பாட்டில் உப்பு அதிகமா போச்சு..அதுக்கு இப்படியா பண்றது ? மனைவியை வெட்டி கொன்ற கணவன் !

click me!