
பிரச்சாரத்தில் பேசிய அண்ணாமலை, ‘பொங்கல் தொகுப்பிற்காக மஞ்சள் பையை இந்தியாவிலே 60 ரூபாய்க்கு வாங்கியது திமுக. எனவே எந்த காலத்திலும் திமுகவிற்கு மன்னிப்பு வழங்க கூடாது. முதலமைச்சர் வெளியே வராமல் வாக்கு கேட்பது இதுவே முதல்முறை என்று கூறினார்.
பின்னர் அண்ணாமலை அளித்த பேட்டியில், உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் அவரை கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர். எப்போது ரூ.1000 கொடுப்பீர்கள் என கேட்டு வருகின்றனர். அதன்பிறகு திமுக வீடு வீடாக சென்று பேப்பர் பிரின்டிங் கொடுத்து வருகின்றனர். உடனே ரூ.1000 கொடுப்போம் என கூறி மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டு காதில் பூ சுற்றும் வேலையை செய்து வருகின்றனர்.
திமுக என்பது கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கக் கூடிய ஒரு நாடக கம்பெனி. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பொருளை கையில் எடுத்து அதனை பற்றி பேசுவார்கள். தற்போது தேர்தல் நேரம் என்பதால் நீட் தேர்வு பற்றி பேசி வருகின்றனர். தேர்தல் முடிந்த பிறகு அன்றைய தினம் மாலையில் நீட் தேர்வை விட்டுவிட்டு வேறு ஒரு தலைப்பை பற்றி பேசுவார்கள்.
தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். ஒரு வார்டில் 800 ஓட்டுக்களை கூட வாங்க முடியாதவர்கள் அயன்பாக்ஸ் கொடுத்தும், 2000 ரூபாய் பணம் கொடுத்தும் ஓட்டு கேட்கிறார்கள் என்றால் 8 மாதத்தில் அவர்கள் என்ன சாதித்தார்கள். இப்போது சொல்கிறார் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தரப்படும் என்று. அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை’ என்று திமுக அரசை கடுமையாக விமர்சித்தார் அண்ணாமலை.