
கொண்டவன் இல்லாத வீட்டில் கண்டவன் எல்லாம் அதிகாரம் செய்வான் என்று சொல்லி வைத்தது, ஜெயலலிதா இல்லாத அதிமுகவில், ஆளுக்கு ஆள் நாட்டாமை செய்வதில் இருந்து நன்கு விளங்குகிறது.
ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை, அவரின் எதிரில் நின்று பேசுவதற்கு கூட அச்சப்படும், அமைச்சர்களையும், கட்சி நிர்வாகிகளையும்தான் பார்க்க முடியும்.
ஆனால் இன்றோ, தினகரன் அணி, எடப்பாடி அணி, திவாகரன் அணி, பன்னீர் அணி, செந்தில் பாலாஜி அணி, தோப்பு வெங்கடாச்சலம் அணி என பல்வேறு அணிகளாக அதிமுக பிளவுபட்டு கிடக்கிறது.
இதில் பன்னீர் அணியை தவிர அனைத்து அணிகளையும் சமரசம் செய்து, லேசான நிம்மதி பெருமூச்சு விட்டார் எடப்பாடி.
ஆனால், சாதி ரீதியாக, கட்சி மற்றும் ஆட்சியில் முக்கியத்துவம் கேட்டு திரண்ட 28 எம்.எல்.ஏ க்கள் கொண்ட ஒரு அணியை மட்டும் சமரசம் செய்ய முடியாமல் திணறி வருகிறார் எடப்பாடி.
தங்கள் சமூகம் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறும் அந்த அணியினர், தங்கள் சமூக எம்.எல்.ஏ க்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, முக்கிய துறைகளுடன் கூடிய அமைச்சர் பதவிகள் வேண்டும், குறிப்பாக துணை முதல்வர் பதவி வேண்டும் என்று அடம் பிடித்து வருகின்றனர்.
இந்த அணியை, பாஜக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், எடப்பாடிக்கு இடர்பாடு கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும்போது, இந்த அணி துடிப்பாக களமிறங்கும் என்றும் சொல்லப்படுகிறது.
அதனால், எந்த நேரத்திலும் தமது தலைமையிலான ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சத்தில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி.