அண்ணாமலையை ஆடவிட்டுப் வேடிக்கை பார்க்கிறாரா ஸ்டாலின்? கொதிக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர்..!

By vinoth kumarFirst Published Aug 7, 2021, 10:51 AM IST
Highlights

என்னுடைய வருத்தமெல்லாம் அண்ணாமலைக்கு ஒரு நியாயம், தினகரனுக்கு ஒரு நியாயம் என்று ஆடவிட்டு வேடிக்கை பார்த்த தமிழக அரசின் மீதுதான். பாஜகவை உண்ணாவிரதம் இருக்க இந்தக் கொரோனா கொடுந்தொற்றுக் காலத்தில் அனுமதித்ததே அரசு செய்த இமாலயத் தவறு என்கிறார்கள் தஞ்சைத்தரணி வேளாண் பெருமக்கள்.

இனியாவது தளபதி ஸ்டாலினின் தமிழக அரசு இப்படிப்பட்ட இம்சை அரசர்களுக்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று தஞ்சைத்தரணி மக்கள் சார்பாக வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் என்று ஜி.கே.முரளிதரன் கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுசெயலாளரும் செய்தித் தொடர்பாளருமான ஜி.கே.முரளிதரன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- கிட்டத்தட்ட ஒருவார காலமாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொரோனா பெருந்தொற்றை விரட்ட பொதுமக்கள் கூடும் ஒவ்வொரு இடங்களாகப் பார்த்துப் பார்த்து மாஸ்க் அணியாதவர்களை திட்டி, கண்டிப்புக்காட்டி, கெஞ்சி, வேண்டுகோள் வைத்து, அரசு உத்தரவை நிறைவேற்ற ஒரு அதிகாரி எப்படி செயல்படுவாரோ அதைவிட நூறுமடங்கு தீவிரமாக செயல்பட்டு, பஸ்ஸிலும், ஆட்டோவிலும், சந்தைகளிலும், மாஸ்க் போடாதவர்களுக்கு கையோடு கொண்டுவந்த மாஸ்க்கை மாட்டச்சொல்லிக் கொடுத்ததை எல்லா காட்சி ஊடகங்களும் தொடர்ந்து காட்டியதை எல்லோரும் பார்த்தோம்.

அ ம மு க வின் தலைவர் தினகரன் கர்நாடக பாஜக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து நடத்தப்போவதாக அறிவித்த உண்ணாவிரதத்தை அரசு கொரோனா பரவாமலிருக்க போட்டிருந்த தடை உத்தரவை மதித்து  தள்ளி வைத்துவிட்டார். தமிழகத்திலேயே அமமுக கொஞ்சம் கூடுதலாக சதைப்பிடிப்புள்ள பகுதி தஞ்சைத்தரணி. அவரே மக்கள் நலனை முன்னிருத்தி போராட்டத்தை தள்ளி வைத்துவிட்டார். ஆனால் ஐபிஎஸ் படித்து போலீஸ் அதிகாரியாக மக்கள் பணியாற்றிய "ப்ரௌவ்டு கன்னடீகா" அண்ணாமலை  அரசு உத்தரவை காற்றில் தூக்கி கடாசிவிட்டு உண்ணாவிரத கோசத்தோடு ஊரைக் கெடுக்க உட்கார்ந்துவிட்டார்.அவரை அலங்கரிக்க, பல்லக்கில் தூக்கி பவிசாக்க, பதவிக்காக, துண்டுபோட தமிழகம் முழுக்கவும் இருந்து ஆர்எஸ் எஸ் காரர்களும் முருகனால் ஞானஸ்நானம் செய்விக்கப்பட்ட போர் நாட் செவன் போர் நாட் டூ போர் ட்வென்ட்டி வகையறாக்களும்  மாஸ்க் அணியாமலும் சிலர் அணிந்தும் நோய் பரப்பும் ரோபோக்களாக வருவதும் போவதுமாக இருந்ததை கானொலி ஊடகங்களில் கண்டோம் வெகுண்டோம்.

கர்நாடகாவில் அணை கட்டுவதை தடுக்க உண்மையிலேயே இவர்கள் நினைத்தால் கர்நாடகாவில் ஆளும் அவர்கள் கட்சி முதல்வர் பொம்மையை நேரில் சந்தித்து சொல்லலாம். அவர்கள் கேட்கவில்லை என்றால் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் செய்யலாம். அதை விட்டுவிட்டு மேகதாது அணைக்கட்டை தடுப்பதாக நாடகமாடி, தமிழக அரசு கொரோனா பெருந்தொற்றைத் தடுக்கப் போராடிக் கட்டிய நோய்த் தடுப்பணையை அல்லவா உடைக்கிறார்கள்.

என்னுடைய வருத்தமெல்லாம் அண்ணாமலைக்கு ஒரு நியாயம், தினகரனுக்கு ஒரு நியாயம் என்று ஆடவிட்டு வேடிக்கை பார்த்த தமிழக அரசின் மீதுதான். பாஜகவை உண்ணாவிரதம் இருக்க இந்தக் கொரோனா கொடுந்தொற்றுக் காலத்தில் அனுமதித்ததே அரசு செய்த இமாலயத் தவறு என்கிறார்கள் தஞ்சைத்தரணி வேளாண் பெருமக்கள். திமுக என்னதான் வளைந்து கொடுத்து பாஜகவோடு இணக்கமாய் போக முயற்சி செய்தாலும் அவர்களைப் பொறுத்தவரை திமுக என்றாலே ஹிந்து ஜென்ம விரோதி. பாசப்பார்வை பார்க்கவே மாட்டார்கள். எனவே மத்திய மண்டூகங்களோடு மஞ்சள் குளிக்கலாம் என்று மனப்பால் குடித்து மதிப்பிழந்து விடாதீர்கள் என்று உண்மையான தோழமைக்கட்சி காரனாக உரிமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இனியாவது தளபதி ஸ்டாலினின் தமிழக அரசு இப்படிப்பட்ட இம்சை அரசர்களுக்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று தஞ்சைத்தரணி மக்கள் சார்பாக வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

click me!