பாஜகவின் தென் மாநில சிறுபான்மை அணி பொறுப்பாளர் பாத்திமா அலி அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து பாஜகவில் இருந்தால் இஸ்லாமியராக வாழ்வதற்கான தகுதி இல்லாமல் போய் விடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
பாஜக அதிமுக மோதல்
தமிழகத்தில் கடந்த 5 வருடமாக அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்த நிலையில், திடீரென அந்த கூட்டணியில் இருந்து அதிமுக விலகி ஷாக் கொடுத்தது. இதனை தொடர்ந்து பாஜகவின் மாநில நிர்வாகிகள் ஒன்றன் பின் ஒன்றாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக அதிமுகவிற்கு பதிலடி கொடுக்க அதிமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேரை தங்கள் அணிக்கு இழுத்தது. இந்த போட்டி இன்னும் ஓயாத நிலையில் 20 வருடங்களுக்கு மேல் பாஜகவில் இருந்த நடிகை கவுதமி தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். நேற்று இரவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.
அதிமுகவில் பாத்திமா அலி
இதனை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச் மாநிலத் தலைவரும், பாஜக சிறுபான்மை மோர்ச்சா மாநில செயலாளராக இருந்து வந்த பாத்திமா அலியும் திடீரென பாஜகவில் இருந்து விலகி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இஸ்லாமியர்களும், இஸ்லாமியர்களின் வாழ்விடங்களும் குறிவைத்து தாக்கப்படும் சூழ்நிலையில் தொடர்ந்து அந்த கட்சியில் இருந்தால் நான் இஸ்லாமியராக இருப்பதற்கே தகுதி இல்லாதவளாக போய்விடுவேன்.ராமர் கோயில் விவகாரம் முடிந்தது, அடுத்தது கிருஷ்ணர் கோயில் தான் என்று அங்கு பேச்சுக்கள் கிளம்பி உள்ளது. மசூதிகள் இடிக்கப்படுகின்றன. அந்த நிலைப்பாடு என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையென தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்