
பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்தாலும் விரைவில் சட்டசபையை கூட்டுவேன், இன்னும் 24 எம்எல்ஏக்கள் மனசாட்சி, மக்கள் தீர்ப்புக்கு ஏற்ப வாக்களிப்பார்கள். நாளையும் நாளை மறுநாள் மட்டும் காத்திருங்கள், உங்களுக்கே முடிவு தெரியும், என்று எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.
பல்வேறு பரபரப்புகளுக்கும், களேபரங்களுக்கும் மத்தியில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். எடியூரப்பா ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்தார், ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். உச்ச நீதிமன்றம் பதவி ஏற்பிற்கு தடை விதிக்க மறுத்த நிலையில் தற்போது, எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
இந்நிலையில் முதல்வராக பதவியேற்று இருக்கும் எடியூரப்பா செய்தியாளர்களை சந்திக்கையில், பெரும்பான்மை பெறுவேன் என நம்பிக்கையுள்ளது. எங்களிடம் 104 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். ஒரு சுயேச்சை எம்எல்ஏ எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார். சட்டமன்றத்தில் கண்டிப்பாக பெரும்பான்மையை நிரூபிப்பேன்.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முடிவு தெரியும். மனசாட்சிபடி வாக்களியுங்கள் என எம்எல்ஏக்களை கேட்டுக்கொள்கிறேன். அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, 24 எம்எல்ஏக்கள் மனசாட்சி, மக்கள் தீர்ப்புக்கு ஏற்ப வாக்களிப்பார்கள். 104க்கும் அதிகமான ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன், 15 நாட்கள் அவகாசம் இருந்தாலும் கூடிய விரைவில் சட்டசபையை கூட்டுவேன், நாளையும் நாளை மறுநாள் மட்டும் காத்திருங்கள், உங்களுக்கே முடிவு தெரியும், என்று நம்பிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.
எடியுரப்பாவின் இந்த பதிலால், மாஜி சித்துவும், நாற்காலி கனவில் இருக்கும் குமாருவும் யார் அந்த 24 எம்எல்ஏக்கள் என சற்று கலக்கத்தில் குழம்பியுள்ளனர்.