
பிரதமர் நரேந்திர மோடி, மண்ணின் மைந்தன் என்று கூறிப் பிரசாரம் செய்து வரும் அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் 182 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு கட்டங்களாக நடத்தப் படும் இந்தத் தேர்தலில், நாளை முதல் கட்டமாக 89 தொகுதிகளில் சனிக்கிழமை நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. மீதமுள்ள 93 தொகுதிகளில் வரும் 14-ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
கடந்த 22 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக., ஆட்சியில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தத் தேர்தலில், தங்களது தொடர்ச்சியான ஆட்சியை மேலும் தொடர்வதற்கு பாஜக.,வும், தாங்கள் 22 வருடங்களுக்கு முன்னர் இழந்த ஆட்சியை பாஜக.,விடம் இருந்து கைப்பற்ற காங்கிரஸும் போராடி வருகின்றன.
முதல் கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸின் சார்பில் ராகுல் காந்தியும் நட்சத்திர பிரசாரகர்களாக இருந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை தேர்தல் தொடங்கும் நிலையில், இன்னமும் பாஜக., தேர்தல் அறிக்கையை வெளியிட வில்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது.
இந்நிலையில் குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தல் அறிக்கை சங்கல்ப பத்ர 2017 ஐ மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று வெளியிட்டார். அப்போது அவர், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியில் குஜராத் மாநிலம் முதலாவது இடத்தை வகிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் குஜராத் மாநிலம் 10 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூறி தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களைக் கூறினார்.
தேர்தல் அறிக்கையில், பா.ஜ., ஆட்சியில் குஜராத் 10 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, உலக வளர்ச்சியின் கலங்கரை விளக்கமாக குஜராத் திகழ்கிறது, குஜராத் மாநிலத்தில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே பாஜக., செயல்பட்டு வருகிறது என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.