
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷாலை தாங்கள் முன்மொழியவில்லை என தீபன் மற்றும் சுமதி ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமியிடம் நேரில் விளக்கமளித்துள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால், வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான டிசம்பர் 4-ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஆனால், அவரை முன்மொழிந்தவர்களில், தீபன், சுமதி ஆகிய இருவரின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்து விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
ஆனால், தீபனும் சுமதியும் மிரட்டப்பட்டு அவ்வாறு சொல்லவைக்கப்பட்டதாகவும், இது ஜனநாயக விரோத செயல் என்றும் கூறி தண்டையார்பேட்டையில் தேர்தல் அலுவலகத்துக்கு எதிரே விஷால் சாலை மறியலில் ஈடுபட்டார். பின்னர், தன்னை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதாக கூறி ஆடியோ ஒன்றை விஷால் வெளியிட்டார். எனினும் விஷாலின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இதுதொடர்பாக டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்போவதாக விஷால் தெரிவித்தார். ஜனநாயகம் சிதைக்கப்பட்டு தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக விஷால் பொங்கினார். மேலும் தற்போது தான் தேர்தலில் நிற்பது முக்கியமல்ல எனவும் தன்னை முன்மொழிந்ததற்காக மிரட்டப்பட்ட தீபன் மற்றும் சுமதி ஆகியோரின் உயிரே முக்கியம் என்றெல்லாம் விஷால் பேசினார்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட தாங்கள் முன்மொழியவில்லை என தீபனும் சுமதியும் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமியிடம் நேரில் விளக்கமளித்துள்ளனர். அதை வீடியோவாக பதிவு செய்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.