எனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது.. ஓபிஎஸ்-சை வாழ்க்கையில் இரண்டே முறைதான் பாத்துருக்கேன்..! மௌனம் கலைத்த சேகர் ரெட்டி..!

First Published Dec 8, 2017, 5:59 PM IST
Highlights
sekar reddy explained about his dairy


எனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது. என் வீட்டில் இருந்து டைரி எதுவுமே எடுக்கப்படவில்லை. வாழ்க்கையில் இரண்டுமுறை மட்டுமே பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளேன் என அதிரடியாக பேசியுள்ளார் சேகர் ரெட்டி.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவிலும் தமிழக அரசியலிலும் அடுத்தடுத்த மாற்றங்களும் அதிரடி நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

அவற்றில் மிக முக்கியமானதும் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்ததும் முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவின் வீட்டிலும் தலைமை செயலகத்திலும் நடத்தப்பட்ட சோதனை. கடந்த  2016 டிசம்பர் 21-ம் தேதி அன்று அப்போதைய தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டிலும் தலைமை செயலகத்திலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. தமிழக அரசியல் வரலாற்றில் இது மிகப்பெரும் கரும்புள்ளி என விமர்சிக்கப்பட்டது. 

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சோதனையைத் தொடர்ந்து தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. ஒரு சாதாரண ஒப்பந்ததாரராக வாழ்க்கையைத் தொடங்கிய சேகர் ரெட்டி, அரசியல் புள்ளிகளுக்கு நெருக்கமானதும் பின்னர் கோடிகளில் புரளும் அளவுக்கு உயர்ந்தது பற்றியும் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. சேகர் ரெட்டிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான நெருக்கம் குறித்து பல்வேறு தகவல்களும் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், சேகர் ரெட்டியின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் மிக முக்கியமான ஆவணமாகக் கருதப்பட்டது சேகர் ரெட்டியின் டைரி. அந்த டைரியில் பல்வேறு பெரும் அரசியல் புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக அப்போதே தகவல் வெளியானது.

அதன்பிறகு, தமிழகத்தின் எந்த இடத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டாலும் சேகர் ரெட்டியின் டைரியில் குறிப்பிடப்பட்ட அமைச்சர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்வியை முன்வைத்து வந்தார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

இந்நிலையில், தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று சேகர் ரெட்டியின் அந்த சர்ச்சை டைரியின் சில பக்கங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக இன்று செய்தி ஒளிபரப்பியது. அந்தப் பக்கங்களில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பண்ணன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பான உண்மைகள் வெளிவர வேண்டும் என்றால், சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஸ்டாலின் இன்று வலியுறுத்தினார்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக இதுவரை வாய்திறக்காமல் மௌனம் காத்த சேகர் ரெட்டி, இன்று முதன்முறையாக வாய் திறந்துள்ளார். தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய சேகர் ரெட்டி, நியாயமாக தொழில் செய்யும் என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 70 கோடி வரை முறையாக வரி கட்டியுள்ளேன். நேர்மையாக தொழில் செய்யும் என்னை பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கி பாடாய் படுத்துகின்றனர். ஆனால், வரி கட்டாமல் ஏமாற்றும் தொழிலதிபர்கள் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் உலவுகின்றனர்.

என் வீட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் டைரி என்னுடையதல்ல. வருமான வரி சோதனையின்போது என் வீட்டிலிருந்து எந்த டைரியும் எடுக்கப்படவில்லை. எனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது. எனது டைரி என்ற பெயரில் வெளியிடப்பட்ட பக்கங்களில் இருக்கும் கையெழுத்து என்னுடையதே கிடையாது. அது எனது டைரிதான் என நிரூபித்தால் அதற்கான தண்டனையை அனுபவிக்க தயாராக இருக்கிறேன்.

அதுமட்டுமல்லாமல், பன்னீர்செல்வத்துடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் பன்னீர்செல்வத்தை இரண்டே முறைதான் பார்த்திருக்கிறேன். திருப்பதியில் ஒருமுறை.. அவரது வீட்டில் ஒரு முறை.. இரண்டே முறைதான் பன்னீர்செல்வத்தை நேரில் பார்த்திருக்கிறேன்.

அமைச்சர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் அவர்கள்தான் எனக்கு ஒப்பந்தத்தில் உதவியதாகவும் தகவல் பேசப்படுகிறது. அதுபோன்று எனக்கு எந்த அமைச்சரும் உதவவில்லை. இதுவரை எந்த அமைச்சரிடமும் சென்று நான் நின்றதில்லை என சேகர் ரெட்டி விளக்கமளித்துள்ளார்.

மேலும் தனது டைரியின் பக்கங்கள் எனக்கூறி செய்தி வெளியிட்ட நிறுவனத்தின் மீது 2.5 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாகவும் சேகர் ரெட்டி தெரிவித்தார்.
 

click me!