திமுகவுக்கு எதிராக தமிழக ஆளுநரிடம் புகார் பட்டியல் வாசித்த பாஜகவினர்... சிக்கலில் திமுக எம்.பி.க்கள்.?

By Asianet TamilFirst Published Oct 12, 2021, 9:57 PM IST
Highlights

திமுக எம்.பி.க்கள் மீதான புகார்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக பாஜக தலைவர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தனர்.
 

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தது. திமுக ஆட்சிக்கு வந்தது முதலே திமுக - பாஜகவினருக்கு இடையே கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளன. நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசின் அணுகுமுறைகளை பாஜக விமர்சித்து வருகிறது. இதேபோல மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் அழைக்கும் விவகாரத்திலும் பாஜகவினர் திமுகவினர் இடையே கருத்து மோதல்கள் அதிகரித்தன. கோயில்கள் திறப்பு விவகாரம் உள்பட இன்னும் பல விவகாரங்களில் இரு கட்சியினரும் மோதல் போக்கையே கடைபிடித்து வருகின்றனர்.
 இந்நிலையில் நெல்லையில் பாஜக நிர்வாகியை திமுக எம்.பி. ஞானதிரவியம் தாக்கியதாகப் புகார் எழுந்தது. அவரை கைது செய்ய வேண்டும் என்ற பாஜகவினரின் கோரிக்கை நிறைவேறவில்லை. இதேபோல கொலை வழக்கில் சிக்கிய கடலூர் திமுக எம்.பி. ரமேஷ், நீண்ட இழுபறிக்கு பிறகுதான்  போலீஸார் கைது செய்தனர். இச்சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்தத் தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர். 
இச்சந்திப்பு குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மூத்த தலைவர்களுடன் இன்று ஆளுநர் ரவியை நேரில் சந்தித்தேன்! திமுக எம்பிகளுக்கு எதிரான வழக்கு, தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஆணவக் கொலைகளைக் கண்டித்து உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும் திமுக எம்பிக்கள் சம்பந்தப்பட்டுள்ள கொலை வழக்குகளில் நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தோம்!” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

click me!