130 விமானங்களை உங்களால் நிர்வகிக்க முடியாதா.? இந்தியாவையே ஏலம் விட்டதுபோல இருக்கு.. கிருஷ்ணசாமி காட்டம்!

By Asianet TamilFirst Published Oct 12, 2021, 9:16 PM IST
Highlights

140 கோடி மக்களை ஆட்சி செய்யக்கூடிய ஓர் அரசால் 130 விமானங்களை இயக்க இயலாது என்று கூறுவது ஏற்புடையது அல்ல. 1.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஏர் இந்தியா நிறுவனத்தை, 15 ஆயிரம் கோடிக்கு விற்றது சரிதானா என்று புதிய தமிழக கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 
 

இதுதொடர்பாக கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வான்வெளிப் போக்குவரத்தின் அடையாளமாகத் திகழும் ஏர் இந்தியா நிறுவனம் தனியாருக்கு கைமாறிப் போனது,  ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்பதைப் போன்ற உணர்வாக அல்ல, இந்தியாவையே ஏலத்திற்கு விட்டதைப் போன்ற ஒரு சொல்லமுடியாத ஆதங்கமும் மனக்கவலையும் ஒவ்வொரு இந்தியரின் ஆழ்மனதில் எழாமல் இல்லை. ஒரு விமானத்தின் விலை சராசரியாக ரூ.400 கோடி என்று எடுத்துக் கொண்டால், 130 விமானங்களின் விலை ரூ.52,000 கோடி. ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர் லைன்ஸ் நிறுவனங்களுக்கு, கூட்டாக இந்தியா முழுவதும் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பீடு பல்லாயிரம் கோடிகைளைத் தாண்டும் என்று ஒரு கணக்கீடு சொல்கிறது.
இந்திய அடையாளத்தைத் தாங்கி நின்ற இந்திய அரசின் ஒரே ஒரு விமான நிறுவனமும் இப்பொழுது விற்கப்பட்டுவிட்டது. 2007 வரையிலும் ஏர் இந்தியாவின் வெளிநாட்டு சேவை பெரிய லாபம் ஈட்டி வந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. ஆனால், உள்நாட்டு சேவையில் ஈடுபட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் லாபம் ஈட்டவில்லை. நன்கு லாபம் ஈட்டி வந்த ஏர் இந்தியாவை மீண்டும் கூடுதல் லாபம் ஈட்டவும், அதை விரிவுப்படுத்துவற்கும் பதிலாக, லாபம் ஈட்டாமல் செயல்பட்டு வந்த இந்தியன் ஏர்லைன்ஸின் உள்நாட்டு விமான சேவையை அத்துடன் இணைக்கும் முயற்சியை 2007-ல் மேற்கொண்டார்கள். அன்று தொடங்கிய தலைவலி தீரவேயில்லை. இறுதியாக இரண்டு சேவைகளும் ஏலத்தில் முடிந்தன.
ஒரு மிகப்பெரிய அரசாங்கத்தின் பின்புலத்தில் இயங்கி, பல பத்தாண்டுகள் இந்தியாவில் விமானப் பயணம் என்றாலே ஏர் இந்தியா /  இந்தியன் ஏர்லைன்ஸை தவிர வேறெதுவுமில்லை என்று ஏகபோகமாக இருந்த காலத்தில், அமைந்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி அதை நிலைநிறுத்திக் கொள்ளாமல், மேல்மட்டத்தில் இருந்தவர்கள் திட்டமிட்டே அதைப் பலவீனப்படுத்தி, நட்டத்தில் தள்ளி, இன்று அதை விற்பனை செய்யும் அளவிற்கு சூழலை உருவாக்கி, அனைத்துப் பழிகளையும் அடிமட்டப் பணியாளர்கள் மீதே போட்டுவிட்டு அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் தப்பிக்க நினைக்கிறார்கள். 
ஏலத்திற்கு விட்டதுதான் விட்டார்கள்; அதை ஒரு நியாயமான விலைக்காவது விட்டிருக்க வேண்டாமா? மதிப்பிட முடியாத பிராண்டிங் (வணிகக் குறியீடு) கொண்ட ஏர் இந்தியா நிறுவனத்தை வெறும் ரூ.15,000 கோடிக்குத் தாரை வார்த்திருப்பதை எப்படித்தான் ஏற்றுக்கொள்ள முடியும்? ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு சுமார் 450 பில்லியன்கள் இருக்கக்கூடும் என்று ஒரு தகவல் கூறுகிறது. அதாவது ஒரு பில்லியன் என்றால் 100 கோடி. மொத்த மதிப்பீடு ரூ.45,000 கோடி என்று ஒரு தகவல் கூறுகிறது. எனவே ஒட்டுமொத்தத்தில் ஏர் இந்தியா மற்றும் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மொத்த சொத்தின் மதிப்பீடு 1.5 லட்சம் கோடிக்கு மேல் வரும். 
இதன் உண்மைத் தன்மை குறித்தும், வெறும் விமானங்கள் மட்டும்தான் டாடா நிறுவனத்திற்கு கைமாற்றப்பட்டிருக்கின்றனவா அல்லது மேற்குறிப்பிட்ட அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் சேர்த்து விற்கப்பட்டுள்ளனவா என்பதை மத்திய அரசு இந்திய மக்களுக்கு கண்டிப்பாக தெளிவுபடுத்த வேண்டும். கண்முன்னே நான்கைந்து விமானங்களை வாடகைக்கு ஓட்டும் நிறுவனங்கள் நான்கைந்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான விமானங்களை வாங்கி இயக்க முடிகிறதென்றால், ஓர் அரசு நிறுவனத்தால் ஏன் அதேபோன்று இயக்க இயலாது?


140 கோடி மக்களை ஆட்சி செய்யக்கூடிய ஓர் அரசால் 130 விமானங்களை இயக்க இயலாது என்று கூறுவது ஏற்புடையது அல்ல; பல்வேறு தளங்களில் கொள்ளை நடைபெற்றிருக்கிறது; வேறெங்கோ அடிப்படையில் குறைபாடு இருக்கிறது. விற்கப்பட்டது ஏர் இந்தியா நிறுவனம் அல்ல; அதில் பயணம் செய்யாத கோடான கோடி இந்தியர்களின் வியர்வையும், ரத்தமும், அவர்களின் உழைப்பும் அதில் அடங்கியிருக்கிறது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு விற்றதை இந்திய மக்கள் தங்களுடைய ஆன்மாவை விற்றதைப் போன்ற அவமான உணர்வுடன் பார்க்கிறார்கள். நட்டத்தில் இயங்குகிறது என்பது உண்மைதான். நட்டம் ஏன் ஏற்பட்டது என்பதைக் கண்டறியாமல், அந்த நிறுவனத்தையே தாரை வார்ப்பது ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிடும் அல்லவா?
இதையே முன்னுதாரணமாகக் கொண்டு, நாளை ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனத்தையும் இதேபோன்று விற்க ஆரம்பித்தால் நாட்டின் கதி என்னவாகும்? ஏர் இந்தியா நிறுவனத்தை விற்று முழுக்கடனும் அடைபட்டிருந்தால் கூட ஒரு சந்தோஷமாவது ஏற்பட்டிருக்கும். ஆனால், வெறும் 15,000 கோடிக்கு ஒரு தேசத்தின் அடையாளத்தையே விற்பது எந்த விதத்தில் நியாயம்? இன்னும் 46,000 கோடி கடன் நிலுவையில் உள்ளதே! மீண்டும் இது போன்ற ஓர் அரசு நிறுவனத்தைக் கட்டியமைப்பது என்பது சாதாரண காரியமல்ல. இந்திய மக்கள் எத்தனையோ நட்டத்தைத் தாங்கி இருக்கிறார்கள். ஆனால், இதுபோன்று இந்திய அடையாளத்தை விற்பதை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.” என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
 

click me!