சிவகங்கையில் ஹெச்.ராஜாவுக்கு எதிராக திரளும் நிர்வாகிகள்.. பாஜக கட்சி பதவிகளிலிருந்து தொடர்ந்து விலகல்.?

By Asianet TamilFirst Published Jun 23, 2021, 8:55 PM IST
Highlights

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக திருப்பு வனம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள 59 கிளைகளும் ஒட்டுமொத்தமாகக் கலைக்கப்பட்டன.
 

தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா போட்டியிட்டார். இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியிடம் ஹெச்.ராஜ தோல்வியடைந்தார். ஹெச்.ராஜாவின் இந்தத் தோல்விக்கு கட்சி நிர்வாகிகளே காரணம் என ஹெச்.ராஜா ஆதரவாளர்கள் பேசுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேச்சால் வெறுத்துபோன சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் செல்வராஜ் தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் மாநிலத் தலைமைக்கு அனுப்பினார்.
இந்நிலையில் மாவட்ட பாஜக தலைவர் செல்வராஜூக்கு ஆதரவாக காரைக்குடி தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள்  தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துவருகின்றனர். இதேபோல சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மற்ற நிர்வாகிகளும் செல்வராஜூக்கு ஆதரவாக பதவி விலகி வருகிறார்கள். அந்த வரிசையில் திருப்புவனம் மேற்கு ஒன்றியத் தலைவர் பாலமுருகனும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்தார். மேலும் அந்த ஒன்றியத்தில் 59 கிளைகளும் கலைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பாலமுருகன் கூறுகையில், “மாவட்டத் தலைவர் செல்வராஜின் அணுகுமுறையால்தான் சிவகங்கை மாவட்டத்தில் பாஜக வளர்ந்தது. காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் ஹெச்.ராஜாவின் தோல்விக்கு செல்வராஜை தொடர்புபடுத்துவதை பாஜக நிர்வாகிகள் பலரும் விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

click me!