
இந்தியா முழுவதும் காவி கொடியே பறக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் இலக்கு. ஆனால், தென்னிந்தியாவை பொறுத்தவரை பாஜகவிற்கு அது மிகப்பெரும் சவாலாக உள்ளது.
கர்நாடகாவை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவால் எதுவுமே செய்ய முடியவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக வாக்கு வங்கிகளை கொஞ்சம் கூட சிதைக்க முடியாமல் திண்டாடி வந்தது பாஜக.
ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவை பல அணிகளாக உடைத்து, அனைத்து அணிகளையும், ஒவ்வொரு விதத்தில் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது பாஜக.
இதில், பாஜகவுக்கு ஓரளவு வெற்றி என்றாலும், அதிமுக தலைவர்கள் பாஜகவின் மகுடிக்கு கட்டுப்படலாமே ஒழிய, தொண்டர்கள் அதை ஏற்க மாட்டார்கள் என்பது அவர்களுக்கு தெரியாமல் இல்லை.
அதே சமயம், திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியல் இருந்து ஓய்வு பெற்றாலும், ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி வலுவாகவே இயங்கி வருகிறது.
கழகங்கள் இல்லாத தமிழகம், கவலைகள் இல்லாத தமிழர்கள் என பாஜக எத்தனை கோஷங்களை முன்வைத்தாலும், தமிழக மக்கள் அதை கொஞ்சம் கூட சீண்டுவதாக தெரியவில்லை.
ஆனாலும், அதிமுகவுக்கு அடுத்து பாஜகவின் கண்ணை உறுத்தி கொண்டிருப்பது திமுகவே. ஆகவே, குடியரசு தலைவர் தேர்தல் முடிந்தவுடன் அதற்கான வேலைகளை முடுக்கிவிட தயாராகி வருகிறது பாஜக.
அதற்காக, திமுக முன்னை பிரமுகர்கள் மீதுள்ள வழக்குகள், குறிப்பாக 2 ஜி வழக்கில் கனிமொழி, ராசா, தொலை தொடர்பு துறை மற்றும் அந்நிய செலாவணி வழக்கில் மாறன் சகோதரர்கள் ஆகியோரின் மீதான பிடியை இருக்குகிறது பாஜக.
அதேபோல், குடும்ப ரீதியாக உள்ள மோதல்களையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, அதன் மூலம் திமுகவை உடைப்பதற்கான முயற்சியிலும் டெல்லி மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
குடியரசு தலைவர் தேர்தல் முடிந்தவுடன், திமுகவுக்கு இடையூறு கொடுக்கும் வேலைகள் அனைத்தும் தீவிரம் அடைய உள்ளன.
இதை திமுக தலைமையும் நன்கு அறிந்தே வைத்துள்ளது. அதனால், டெல்லியின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தன்னை தயார் படுத்தி வருகிறது என்று கூறப்படுகிறது.
குடியரசு தலைவர் தேர்தல் முடிந்தவுடன், சசிகலாவை போல சிலருக்கு வழக்கில் சிறை தண்டனை கிடைக்கலாம். அதில் இருந்து, பாஜகவின் தாக்குதல் தொடங்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.