மார்ச் 30ல் பிரதமர் மோடி வருகை... புதுச்சேரியில் தீயாய் வேலை செய்யும் பாஜக எம்.பி. ராஜீவ் சந்திரசேகர்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 28, 2021, 12:33 PM IST
Highlights

பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி புதுச்சேரி வருகிறார். ஏஎப்டி திடலில் நடக்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டணித் தலைவர்களுடன் பங்கேற்று உரையாற்றுகிறார்.

தமிழகம், புதுச்சேரிக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 16, பாஜக 9, அதிமுக 5 இடங்களில் போட்டியிடுகிறது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி 28 தொகுதிகள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது, தொண்டர்களை மேலும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட வைத்துள்ளது. 

புதுச்சேரியில் ஆட்சியமைக்க தீவிரம் காட்டிவரும் பாஜக, கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே புதுச்சேரியில் தீவிர களப்பணியாற்றி வருகிறது. புதுச்சேரி தேர்தல் பாஜக மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் களத்தில் இறங்கி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிரமாக செயல்பட்டுவருகிறார். 30 தொகுதி வாக்காளர்களின் விருப்பங்களை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை தயார் செய்தது முதல் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவது வரை ராஜ்ய சபா எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் பிரதமர் மோடி மார்ச் 30ம் தேதி புதுச்சேரி வர உள்ளார். அன்று மாலை 5 மணி அளவில் ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து ராஜ்ய சபா எம்.பி. ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர், அவருடன் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், பாஜக பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் ஆய்வு நடத்தினர். 

தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக புதுச்சேரி வருவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிப்ரவரி 25ம் தேதி பிரதமர் மோடி வருகையும் மற்றும் அவர் அறிவித்துள்ள வளர்ச்சி திட்டங்களும் புதுச்சேரி பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே மார்ச் 30ம் தேதி புதுச்சேரியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்திற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
 

click me!